13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் நபர்.. கருணைக்கொலை செய்ய திட்டம்.. முடிவெடுக்கும் உச்ச நீதிமன்றம்!
13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் ஹரிஷ் ராணா என்பவரை கருணைக்கொலை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது. ஏற்கெனவே 2018 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தால் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 3ஆவது முறையாக ஜனவரி 13இல் விசாரிக்கப்பட உள்ளது.
2013ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள கல்லூரி ஒன்றில், பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்தவர் ஹரிஷ் ராணா. அப்போது நான்காவது மாடியின் பால்கனியில் இருந்து விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, அவர் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். பிஜிஐ சண்டிகர், டெல்லி எய்ம்ஸ், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனை ஆகியவற்றில் விரிவான சிகிச்சைகள் அளி்க்கப்பட்டபோதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது குடும்பத்தினர் அவரை செவிலியர் உதவியுடன் வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகின்றனர். இதனால், அவருடைய குடும்பத்திற்குப் பெரிய அளவில் நிதி செலவாகிறது. தவிர, இதனால் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதனால், அவரைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2018 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தால் அந்தக் கோரிக்கை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது 3ஆவது முறையாக ஜனவரி 13இல் விசாரணைக்கு வரவுள்ளது. அவர், குணமடைவதற்கான நம்பிக்கை இல்லை என்பதை உறுதிப்படுத்தும் புதிய மருத்துவ அறிக்கையைத் தொடர்ந்து இந்த மூன்றாவது மனு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ராணாவின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் ஜனவரி 13ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கருணைக்கொலைக்கு விதிக்கப்பட்டுள்ள நடைமுறையின்படி, உயிர்வாழும் சிகிச்சையை திரும்பப் பெறுவது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு நீதிமன்றம் அவர்களிடம் நேரடியாகக் கேட்கும்.
குணப்படுத்த முடியாத கடுமையான நோயால் அவதிப்படும் ஒருவர், வலியிலிருந்து விடுபட, மருத்துவர் உதவியுடன் தனது உயிரை முடிவுக்குக் கொண்டுவரும் செயல்முறை கருணைக்கொலை ஆகும். இதற்கு உலகளவில் ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. சில நாடுகளில் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் இது ’பேசிவ் யுத்தனேஷியா’ என்ற முறையில், மீளமுடியாத நோயாளிகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படுகிறது.

