
கடந்த புதன் அன்று காலை 4 மணியளவில் அயோத்தியா ரயில் சந்திப்பில் நின்றிருந்த சரயு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் ஏறியுள்ளார். என்ஜினில் இருந்து 3 ஆவது பெட்டியில் ஏறிய அந்த பயணி, பெட்டியில் பெண் காவலர் ஒருவர் முகத்தில் கடுமையான வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவரது கால் ஆடை இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக இது குறித்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட காவலர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு முதற்கட்ட சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவர் கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே காவல் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “சுல்தான்பூர் மாவட்டம் கோட்வாலி காவல் எல்லைக்கு உட்பட்ட பெண்கள் பாதுகாப்பு தொடர்பான 181 ஹெல்ப்லைன் பிரிவில் பாதிக்கப்பட்ட காவலர் பணியமர்த்தப்பட்டார். அவருக்கு அயோத்தியில் உள்ள சவான் கா மேளாவிற்காக பணி ஒதுக்கப்பட்டது” என்றார்.
மேலும் பாதிக்கப்பட்டவர் கண்டறியப்படும் போது பெட்டியில் வேறுபயணிகள் இல்லை. அயோத்தியா சந்திப்பில் ஏறிய பயணிகள் தான் காவலரை கண்டனர் என்றும் காவலருக்கு திவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்தான ட்விட்டர் பதிவுகளில் காவலர் பலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக பதிவு வெளியான வண்ணம் இருந்தது. தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.