இந்தூர் | பாறை மண்ணில் மலர்ந்த பசுமை.. 8 ஆண்டுகளில் 40 ஆயிரம் மரங்கள்! 74 வயதில் சாதனை!
கடினமான பாறை நிலமானாலும் கடுமையாக உழைத்தால், நிச்சயம் பலன் உண்டு என்பதற்கு உதாரணமாய்த் திகழ்கிறார், சங்கர் லால் கார்க். 74 வயதான இவர், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர். தற்போது உலக ஆராய்ச்சியாளர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராக இருக்கும் அவர், கடந்த 2015ஆம் ஆண்டு கல்வி நிறுவனம் ஒன்றில் ஓய்வு பெற்றார்.
அப்போது தனது குடும்பத்துடன் சேர்ந்து கல்வி நிறுவனம் தொடங்க முடிவு செய்தார். இதற்காக, இந்தூரில் மோவ் என்ற இடத்தில் நிலம் வாங்கினார். ஆனால், அப்பகுதி வெறும் தரிசாக பாறைகள் நிரம்பியதாக இருந்தது. இதனால், அவர் நினைத்தபடி கல்வி நிறுவனம் தொடங்க முடியவில்லை.
இதனையடுத்து, அந்த நிலத்தை விவசாய நிலமாக மாற்ற முடிவு செய்த கார்க், மரக்கன்றுகள் வாங்கி நட்டதுடன், தண்ணீர் ஊற்றி உரம் போட்டு வளர்த்தார். தொடக்கத்தில் 2016ஆம் ஆண்டு, வேம்பு, அரசமரம் மற்றும் எலுமிச்சை மரங்களை நடத் தொடங்கினார்.
பிறகு படிப்படியாக, பாறை நிறந்த பகுதியில் காஷ்மீரின் குங்குமப்பூ, கல்பவிருட்சம், குங்குமப்பூ, நேபாளத்தின் ருத்ராட்சம், ஆப்பிள், தாய்லாந்தின் டிராகன் பழம், ஆஸ்திரேலியாவின் வெண்ணெய், இத்தாலியின் ஆலிவ் மற்றும் மெக்சிகோவின் பேரிச்சை மற்றும் ஆலிவ், லிச்சி, ஆப்ரிக்க துலிப்ஸ் தேக்கு தேக்கு, ரோஸ்வுட், சந்தனம், மஹோகனி, பனியன், சால், அஞ்சன், மூங்கில், வில்லோ, தேவதாரு, பைன், தஹிமான், காமர் மற்றும் சில்வர் ஓக், ஏலக்காய் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மர இனங்களை நட்டார்.
இதனால், கடந்த 8 ஆண்டுகளில், அதாவது 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதக் கணக்குப்படி, 40 ஆயிரம் மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் 12 அடி உயரம் வளர்ந்துள்ளது. காஷ்மீர் மலைப்பகுதிகளில் மட்டும் வளரும் குங்குமப்பூவும் இங்கு உள்ளது.
முதலில் 2021ஆம் ஆண்டு 25 குங்குமப்பூ செடிகள் நடப்பட்டன. 2022இல் இந்த எண்ணிக்கை 100 ஆகவும், 2023இல் 500 ஆகவும் உயர்ந்தது. இச்செடிகள் கடும் வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க தொழில்நுட்பத்தை கார்க் பயன்படுத்தி உள்ளார். அதேநேரத்தில், இந்த மரக்கன்றுகளை வளர்க்க, கார்க் பல சவால்களை எதிர்கொண்டார்.
குறிப்பாக, மரங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 3 இடங்களில் 600 அடி போர் போட்டும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து முதலில் தண்ணீர் தொட்டி வாங்கி வைக்கப்பட்டது. பிறகு, குளம் வெட்டி அதில் தண்ணீரைச் சேகரித்து, சொட்டுநீர் பாசன முறையில் மரக்கன்றுகளுக்கு விடப்பட்டது. தற்போது பச்சைப்பசேலன்று காட்சியளிக்கும் இந்தப் பகுதியானது தற்போது 30 வகையான பறவைகள், 25 வகையான வண்ணத்துப்பூச்சிகள், நரி, முயல், காட்டுப் பன்றிகள், கழுதைப்புலிகளுக்கு புகலிடமாக இந்தப் பகுதி விளங்குகிறது. இந்த வனப்பகுதியை பார்வையிட வருபவர்களிடம் கார்க் எந்த கட்டணமும் வசூலிப்பது இல்லை. இங்கு கருத்தரங்கம் மற்றும் தியானக்கூடம் ஒன்றையும் அவர் நிறுவி உள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேக தோட்டம் மற்றும் மைதானத்தையும் உருவாக்கி உள்ள அவர், இப்பகுதியில் இன்னும் 10 ஆயிரம் மரங்களை வளர்த்து, சுற்றுச்சூழலையும், பூமியையும் காக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார்.