\
Indigo Flight
Indigo FlightReuters

திடீரென அலறிய Emergency அலாரம்! விறுவிறுவென U-turn அடித்த விமானம்! வானில் 'திக்திக்' நிமிடங்கள்!

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது Emergency அலாரம் அலறும் அந்த தருணம் உள்ளிருக்கும் பயணிகளுக்கு எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு திகில் சம்பவம் இண்டிகோ விமானத்தில் அரங்கேறியுள்ளது.
Published on

செய்தியாளர்: ஐடா அருட்செல்வி

கோவாவில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் கோவாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இண்டிகோவின் 6E 2102 விமானம் இன்று காலை 9.15 மணிக்கு கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்டது. திட்டமிட்ட நேரத்தைவிட 5 நிமிடங்கள் தாமதமாக விமானம் புறப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே அதன் ஒரு இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானிகள், விமானத்தை மீண்டும் கோவாவுக்குத் திருப்பினர்.

Indigo Flight
Indigo FlightReuters

விமானம் கோவா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், சிறிது நேரத்துக்கு ‘முழு அவசரநிலை’ அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொடரையும் படிக்க: ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக் குறிப்பு - 6 | தனி மருத்துவர் கிளினிக்கை மூடக் காரணம்!

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும், திட்டமிட்ட நடைமுறைகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விமானம் பாதுகாப்பாக மீண்டும் மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo Flight
Indigo FlightReuters

இதனைத் தொடர்ந்து, பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் குறைக்க சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டதுடன், மாற்று விமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது. பயணிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் விமானத்தின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமை என்றும் தெரிவித்துள்ளது இண்டிகோ.

முன்னதாக, நேற்று தம்மாமில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும் அவசரநிலை ஏற்பட்டது. விமானத்தின் கழிவறையில் ‘BOMB’ என எழுதப்பட்ட துண்டுக் காகிதம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அந்த விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Indigo Flight
அதானிக்காக களமிறங்கும் மத்திய அரசு.. இண்டிகோ, ஏர் இந்தியா ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com