அழுக்கடைந்த இருக்கை.. இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.75 லட்சம் அபராதம்!
உலகம் முழுவதும் சமீபகாலமாக, விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், விமான இறக்கைகள் கீழே விழுவது, நடுவானில் விமானம் குலுங்குவது, உணவுப் பிரச்னைகள், விமான விபத்துகள் எனப் பல்வேறு சம்பவங்களும், விமானத்தில் ஏற்படும் கோளாறுகளும் அதற்கு உதாரணமாய் உள்ளன. மறுபுறம், விமானங்களில் நிலவும் அலட்சியமற்ற சேவைகளால் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருவதுடன், அதற்கு அபராதமும் விதிக்கப்படு வருகிறது. அந்த வகையில், விமானத்தில் சுகாதாரமற்ற இருக்கை தந்ததற்காக பயணி ஒருவருக்கு ரூ.1.75 லட்சம் இழப்பீடு வழங்க இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையம் உத்தரவிட்டது.
டெல்லியில் உள்ள சாணக்யபுரியைச் சேர்ந்தவர் பிங்கி. இவர், டிசம்பர் 27, 2024 அன்று ஒரு பயண நிறுவனம் மூலம் தனக்கும், தனது கணவர் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.48,739க்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஜனவரி 2, 2025 அன்று, பாகுவிலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏறியபோது, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அழுக்காகவும், சுகாதாரமற்றதாகவும் இருப்பதைக் கண்டார்.
இதுகுறித்து அவர், அந்த விமானப் பணிப்பெண்ணிடம் புகார் அளித்தபோது, அந்தப் பணியாளர், சுத்தமான இருக்கைகளை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று கூறி, மன்னிப்பு கேட்டதோடு, 14வது வரிசையில் மாற்று தனிமைப்படுத்தப்பட்ட இருக்கையை வழங்கினார். இதனால் மன உளைச்சல் அடைந்த பிங்கி, ஜனவரி 13 ஆம் தேதி, விமான நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் நிறுவனத்திடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காததால், இழப்பீடு கோரி நுகர்வோர் ஆணையத்தை அணுகினார். இந்த சம்பவம் விமானம் முழுவதும் தனக்கு குறிப்பிடத்தக்க துன்புறுத்தலையும் உணர்ச்சிரீதியான துயரத்தையும் ஏற்படுத்தியதாக அவர் ஆணையத்திடம் தெரிவித்தார். பூனம் சவுத்ரி தலைமையிலான ஆணையம், விமான நிறுவனத்தின் சேவை குறைபாடுடையதாகவும், நுகர்வோர் எதிர்பார்ப்புகளை மீறுவதாகவும் கண்டறிந்தது. அப்போது, ‘பயணியை வேறு இருக்கைக்கு மாற்றுவதன் மூலம் பிரச்சினை அந்த இடத்திலேயே தீர்க்கப்பட்டது’ என இண்டிகோ தெரிவித்துள்ளது.
இருப்பினும், ’இந்தக் கருத்தை ஏற்காத ஆணையம், இருக்கைகளின் நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், சேவையில் குறைபாடு இருக்கிறது’ எனவும் தீர்ப்பளித்தது. மேலும், அசுத்தமான இருக்கை ஏற்பாடுகள் நுகர்வோர் எதிர்பார்ப்புகளையும் விமான நிறுவனத்தின் ஒப்பந்தக் கடமைகளையும் தெளிவாக மீறுவதாக ஆணையம் கூறியது. புகார்தாரர் தனது பயணத்தை முடித்ததால் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் மன வேதனை, உடல் வலி மற்றும் துன்புறுத்தலுக்கு ரூ.1.5 லட்சமும், வழக்குச் செலவுகளாக கூடுதலாக ரூ.25,000ம் அபராதமும் விதித்து ஆணையம் உத்தரவிட்டது. சிவில் விமானப் போக்குவரத்துத் தேவைகளின் கீழ், இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட விமான நிறுவனங்கள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் படி, ஒரு பிரத்யேக ஹெல்ப்லைனுடன் பதிலளிக்கக்கூடிய குறை தீர்க்கும் அமைப்பைப் பராமரிக்க வேண்டும் என்றும் பெஞ்ச் விமான நிறுவனங்களுக்கு நினைவூட்டியது.