அமெரிக்காவா.. ரஷ்யாவா? போர் விமானங்கள் தேர்வு.. கடினமான சவாலை எதிர்கொள்ளும் இந்தியா!
இந்தியா தனது விமானப்படையை நவீனமயமாக்கும் வண்ணம், அதிநவீன அமெரிக்க போர் விமானங்களை வாங்க இருக்கிறது. அதாவது, கடந்த மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்புவைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, இந்தியாவுக்கு எஃப் 35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார். தற்போது உலகில் பயன்பாட்டில் உள்ள போர் விமானங்களிலேயே அதிநவீனமானதாகவும் வலிமை மிக்கதாகவும் F35 ரக விமானங்கள் பார்க்கப்படுகின்றன. பிரபலமான லாக்ஹீட் நிறுவனம் தயாரிக்கும் இவ்விமானங்கள் ஒலியை விட வேகமாக பறக்கக்கூடியவை என்பதும் ரேடார் போன்ற மின்னணு சாதனங்கள் கண்களில் இருந்து தப்பிக்கும் வல்லமை கொண்டைவை.
மேலும் தொலைதூரத்திலிருந்து இலக்கை குறிவைத்து அழிக்கும் திறனும் இவ்விமானங்களுக்கு உண்டு. தற்போது இந்தியாவிடம் உள்ள ரஃபேல் விமானங்கள் முந்தைய தலைமுறையாக அறியப்படும் நிலையில் இனி வாங்க உள்ள F35 விமானங்கள் 5ஆவது தலைமுறையைச் சேர்ந்தவை ஆகும். இந்தியா விமானப்படையில் ஏற்கனவே உள்ள பல விமானங்கள் பழையதாகிவிட்ட நிலையில் ரஃபேல் விமானங்கள் வலிமையை கூட்டியுள்ளன. அடுத்து வர உள்ள F35 விமானங்கள் வலிமையை மேலும் பல படிகள் அதிகரிக்க உள்ளன. எனினும் இவற்றின் விலையும் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு செலவுகளும் எதிர்மறையான விஷயங்களாக உள்ளன. மறுபுறம், ரஷ்யாவைச் சேர்ந்த சுகோய் நிறுவனம் ஏற்கெனவே தங்களின் SU-57 போர் விமானத்தை வாங்கும்படி இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இரண்டு நாடுகளும் தங்களது போர் விமானங்களை வழங்க முன்வந்திருக்கும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்பது இனிமேல்தான் தெரியவரும். இதற்கிடையே, கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான ஏரோ இந்தியாவில் அமெரிக்காவின் F35 மற்றும் ரஷ்யாவின் SU-57 ஆகிய இரு ஜெட் விமானங்களும் நிறுத்தப்பட்டன. இதனால், அமெரிக்காவின் போர் விமானத்தைவிட ரஷ்யாவின் போர் விமானம் சிறந்ததா என கேள்வி எழும்பியுள்ளது. ”அமெரிக்காவின் F35 போர் விமானங்கள் சிறந்தது. அது 51% இந்தியாவுக்கு பாதுகாப்பாக இருக்கும்” என சிபாரிசு செய்யும் வல்லுநர்கள், "இதற்காக பில்லியன் கணக்கான டாலரை முதலீடு செய்ய இந்தியா தயாராக வேண்டும்" என அவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், SU-57 ஜெட் விமானங்கள் F35 அளவுக்கு நிகராக இருக்காது என்கிறனர்.
இன்னும் சிலரோ, ”அமெரிக்க அல்லது ரஷ்ய போர் விமானங்களை இந்தியா தேர்ந்தெடுக்காது” என்று நம்புகிறார்கள். அவர்கள், “இந்தியாவைப் பொறுத்தவரை, விமானப்படையின் எதிர்காலம் ஜெட் விமானங்களை வாங்குவது மட்டுமல்ல. அவற்றை ஒரு வலுவான மேற்கத்திய கூட்டாளியுடன் இணைந்து உருவாக்குவதும் ஆகும். ஆனால் அந்த தொலைநோக்குப் பார்வை வெற்றிபெற, இந்தியா தனது உள்நாட்டு போர் விமானங்களை சரியான நேரத்தில் தயாரிக்க வேண்டும்” என்கின்றனர். அதற்குக் காரணமாக, 2019ஆம் ஆண்டு 36 ரஃபேல் விமானங்கள் பெறப்பட்டதில் மத்திய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து செயல்படுகிறது. சொந்தமாக ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வடிவமைத்து வருகிறது. அதன் காரணமாகவே உள்நாட்டில் தயாரிக்கப்படுவதற்கு முன்னுரிமை அளித்துவருகிறது. அதேவேளையில், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தாமதமும் வெளிநாட்டு கொள்முதல்களை நிறுத்த கட்டாயப் படுத்துகின்றன. அந்த அமைப்பு உருவாக்கி AMCA, இந்தியாவின் சொந்த போர் விமானமாகும்.