இந்தியாவின் ஒரே மண் எரிமலை.. 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெடிப்பு.. எங்கே.. ஏன்?
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பாரடாங்கில் உள்ள இந்தியாவின் ஒரே மண் எரிமலை மீண்டும் வெடித்துள்ளது.
இந்தியாவிலும் எரிமலை இருக்கிறதா எனக் கேள்வியெழுப்புவோர் உண்டு. அப்படி கேள்வி எழுப்புவர்களுக்கு மத்தியில் இந்தியாவின் ஒரேயொரு மண் எரிமலையும் மீண்டும் வெடித்திருப்பதுதான் தற்போதைய வைரல் செய்தியாக உள்ளது. அதுகுறித்து இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பாரடாங் வடக்கு மற்றும் மத்திய மாவட்டத்தில் மண் எரிமலை ஒன்று அமைந்துள்ளது. போர்ட் பிளேரிலிருந்து கிட்டத்தட்ட 150 கி.மீ தொலைவில் உள்ள இந்த எரிமலை, இந்தியாவின் ஒரே மண் எரிமலையாகவும் உள்ளது. மேலும், இது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இதுதவிர, அங்கு இன்னும் சில எரிமலைகளும் உண்டு. இந்த நிலையில் இந்த எரிமலை, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 2ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் வெடித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பயங்கர சத்தத்துடன் இந்த எரிமலை வெடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படியே இந்தச் செய்தியை பிடிஐ வெளியிட்டுள்ளது. கடல்சார் நில அதிர்வு மாற்றங்கள் காரணமாக இது வெடித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இந்த எரிமலை 2005ஆம் ஆண்டு வெடித்திருந்தது. தற்போது நிகழ்ந்த இந்த எரிமலை வெடிப்பின் விளைவாக, அங்கு சுமார் 3-4 மீட்டர் உயரமுள்ள ஒரு மண் மேடு உருவாகியுள்ளது. மேலும், 1,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் சேறு நிறைந்த மண் பரவியுள்ளது. தொடர்ந்து இன்னும் அங்கு வெடிப்பு நிகழ்வதாகவும், சேற்று மண்ணும் புகையும் தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, அங்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து புவியியல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’மட் டோம்ஸ்' என்றும் அழைக்கப்படும் மண் எரிமலைகள், தொடர்ச்சியான புவியியல் செயல்முறைகளை உள்ளடக்கிய சேற்றுக் குழம்புகள், நீர் மற்றும் வாயுக்கள் வெடிப்பதன் மூலம் உருவாகின்றன. ஆனால் மற்ற எரிமலைகளைப் போலல்லாமல், இந்த எரிமலைகள் வெடிக்கும்போது எரிமலைக் குழம்புகள் வெளியேறுவதில்லை. மண் எரிமலைகளின் அளவுகள் ஒன்று முதல் இரண்டு மீட்டர் முதல் 700 மீட்டர் உயரம் வரையிலும், ஒன்று முதல் இரண்டு மீட்டர் முதல் 10 கிலோமீட்டர் வரை அகலம் வரையிலும் இருக்கும். மண் எரிமலைகள் வெடிக்கும்போது சேற்றை உருவாக்குவதால், அதற்கு, ‘சேற்று எரிமலை’ என்ற பெயரும் உண்டு.
முன்னதாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள பாரன் தீவில் செப்டம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு முறை சிறிய எரிமலை வெடிப்புகள் காணப்பட்டன. போர்ட் பிளேயரிலிருந்து கடல் வழியாக கிட்டத்தட்ட 140 கி.மீ தொலைவில் உள்ள இந்த தீவு, 8.34 சதுர கிலோமீட்டர் மொத்தப் பரப்பளவைக் கொண்டுள்ளது. இத்தீவில் மக்கள் வசிக்கவில்லை. அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகத்தின் காப்பகத்தில் உள்ள தரவுகளின்படி, இந்த பாரன் தீவில் முதல் வெடிப்பு 1787இல் நிகழ்ந்துள்ளது, அதைத் தொடர்ந்து 1991, 2005, 2017 ஆகிய ஆண்டுகளில் லேசான வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில், நவம்பர் 2022இல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பராடங்கில் உள்ள சேற்று எரிமலையும், பாரன் தீவில் உள்ள எரிமலையும் தனித்தனி இடங்களில் அமைந்துள்ளன, இரண்டும் ஒன்றல்ல என்பது குறிப்பிடத்தக்கது.