இந்தியாவில் 17% குறைந்த ஆபரணத் தங்கம்.. கோல்டு ETFஇல் முதலீடு அதிகரிப்பு!
நடப்பாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை உலகளவில் தங்கத்தின் தேவை 3 சதவீதம் அதிகரித்து ஆயிரத்து 249 டன்களாக உயர்ந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் நிகழும் அரசியல் பொருளாதார பதற்றங்களால், தங்கத்தில் முதலீடு அதிகரித்திருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. கோல்டு ETF முதலீடுகள் மூலம் தேவை அதிகரித்துள்ளதாகவும், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 170 டன் மதிப்பில் ETF முதலீடுகள் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன முதலீட்டாளர்கள் 115 டன்கள் மதிப்பிலும், இந்திய முதலீட்டாளர்கள் 46 டன்கள் மதிப்பிலும் முதலீடு செய்திருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பாண்டின் முதல் அரையாண்டில் கோல்டு ETF முதலீடுகள் இதுவரை இல்லாத அளவிற்கு 397 டன்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரம், தங்க ஆபரணங்களுக்கு தேவை சீனாவில் 20 சதவீதமும், இந்தியாவில் 17 சதவீதமும் குறைந்திருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.