எத்தனை சவால்கள், கேள்விகள்!நாட்டின் முதல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது எப்படி? வியக்கவைக்கும் பின்னணி!

இந்தியாவின் முதல் தேர்தலில் வேலை செய்ய நிரந்தர ஊழியர்களோ, தற்கால ஊழியர்களோ, தேர்ந்த உட்கட்டமைப்போ அல்லது தேர்வு செய்பவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கான போதிய வசதிகளோ என ஏதும் இல்லை. சுகுமார் சென் அனைத்தையும் முதலில் இருந்து தொடங்க வேண்டி இருந்தது.
பிரதமர் நேரு
பிரதமர் நேருpt web

இந்தியாவின் முதல்தேர்தல்

1950 ஜனவரி 26ல் அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. 3 ஆண்டுகளாக சுதந்திரக் காற்றை சுவாசித்து வந்த மக்கள் அன்று முதல் ஜனநாயகக் காற்றையும் சுவாசித்தனர். 1952 ஆம் ஆண்டு பரந்துபட்டுக் கிடந்த இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் நடந்தது. மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டமன்றத்திற்கும் சேர்த்தே அந்த தேர்தல் நடைபெற்றது.

21 வயதான அனைவரும் வாக்களிக்கலாம் என்றது அரசியல் சாசனம். பெரும்பான்மையான இளைஞர்கள் தங்களது முதல் வாக்கினை செலுத்த தயாராக இருந்தனர். ஆனால், தேர்தலை கட்டுக்கோப்பாக நடத்துவதற்கு அதிகாரி வேண்டுமே.. தலைமைத் தேர்தல் அதிகாரி.. விரிந்து கிடந்த இந்தியாவில் மக்களை ஜனநாயகப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ரட்சகன்., தேவதூதன் இன்னும் என்னென்ன சொல்லமுடியுமோ எல்லாம்.. தலைமைத் தேர்தல் அதிகாரியை தேடும் படலம் நடந்தது. கண்டெடுக்கப்பட்டவர் சுகுமார் சென்.

சுகுமார் சென்

ஐசிஎஸ் அதிகாரியான சுகுமார்சென் மேற்கு வங்கத்தின் தலைமை செயலாளர். சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக மார்ச் 21 1950ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெரிதும் இல்லாத சூழல், கல்வியறிவு கொண்ட மக்கள் பெரும்பான்மையாக இல்லாத சூழல், பெரும் கலவரங்கள் நடந்து முடிந்த அடுத்த சில ஆண்டுகளுக்குள் நடக்கும் தேர்தல், கலவரத்தால் மக்களது அடையாள ஆவணங்கள் காணாமல் போன சூழல் என பெரும் இன்னலுக்குள் தேர்தலை நடத்த வேண்டிய சவாலை எதிர்கொண்டிருந்தார் சுகுமார் சென். மிகப்பெரிய உழைப்பைக் கோரும் பணி. எதிர்கால இந்தியாவிற்கான அடித்தளம். முதல் தேர்தல் என்பதால் உலகநாடுகள் பலவும் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் நிலை என முள் மேல் நடக்கும் வேலை.

தேர்தலை நடத்துவதில் இருந்த சிக்கல்

19 செப்டம்பர் 1945 அன்று இந்தியாவின் வைஸ்ராய் வேவல் பிரபு அறிவித்ததன்படி, 1946 ஜனவரியில் தொடங்கிய மாகாணத் தேர்தல்கள் ஏப்ரல் வரை நடந்தது. அந்த தேர்தலின் போது பணியாற்றிய பலரும் 1951 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் இல்லை. இந்தியப் பிரிவினையின் போது நடந்த கலவரத்தால் பலரும் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது புலம்பெயர்ந்து போயிருந்தனர். இந்தியாவின் முதல் தேர்தலில் வேலை செய்ய நிரந்தர ஊழியர்களோ, தற்கால ஊழியர்களோ, தேர்ந்த உட்கட்டமைப்போ அல்லது தேர்வு செய்பவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கான போதிய வசதிகளோ என ஏதும் இல்லை. சுகுமார் சென் அனைத்தையும் முதலில் இருந்து தொடங்க வேண்டி இருந்தது.

ஆனாலும் தேர்தலை நடத்த வேண்டுமே. வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பித்தன. 1951 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது தேர்தல் ஆணையம். மொத்தம் 480 மக்களவைத் தொகுதிகள். அதில் 314 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள், 172 இரட்டை உறுப்பினர் தொகுதிகள், 3 மூன்று உறுப்பினர் தொகுதிகள்.

மக்களுக்கான பிரச்சாரம்

மக்களுக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்த, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் பணியை தேர்தல் ஆணையமே மேற்கொண்டது. தேசம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. அகில இந்திய வானொலியில் விழிப்புணர்வுக்கான நிகழ்ச்சிகள், 3000 திரைப்படங்களில் திரையிடப்பட்ட சிறப்பு ஆவணப்படம் போன்றவற்றின் மூலம் தேர்தல் செயல்முறை, வாக்கு செலுத்தும் முறை போன்றவற்றை மக்களுக்குக் கற்பிக்கப்பட்டது. மக்களுக்கு ஏற்றவாரு தேர்தலில் வாக்களிக்கும் முறை கட்டமைக்கப்பட்டது.

சுகுமார்சென் பொதுத்தேர்தல் குறித்தான தனது அறிக்கையில் இவ்வாறு எழுதுகிறார்., “இந்திய நிலைமைகளுக்கு ஏற்றவாறும், படிப்பறிவில்லாத வாக்காளர்கள் கூட புத்திசாலித்தனமாக வாக்களிப்பதற்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்”. இதன்படி, வாக்காளர்களுக்கு சுலபாக இருக்கும் வகையில், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு தனித்தனி சின்னங்களை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். சின்னங்கள் கூட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அல்லது மக்களுக்கு மிகத்தெரிந்த பொருட்களாகவோ அல்லது விலங்குகளின் படங்களாவோ பார்த்துப் பார்த்து தேர்வு செய்தது.

வாக்காளர்கள் தங்களது வாக்குகளை, வாக்குச்சீட்டுகளில் குறிக்கத்தேவையில்லை. ஒவ்வொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிகளுக்கு ஏற்றவாறு சின்னங்கள் பதிக்கப்பட்ட பெட்டிகள் தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தங்களது வாக்குசீட்டுகளை போட்டுவிடலாம். அத்தகைய பெட்டிகள் செய்ததும், அதை அரசு வாங்கியதும் தனிக்கதை.

நாசிக்கில் உள்ள அரசு பாதுகாப்பு அச்சகத்தில் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டன. 1 லட்சத்து 96 ஆயிரத்து 084 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில் 27 ஆயிரத்து 527 வாக்குச்சாவடிகள் பெண் வாக்காளர்களுக்காக மட்டும் அமைக்கப்பட்டவை.

அரசியல் கட்சிகளின் நிலை

1. காங்கிரஸ்

இதுஒருபுறமிருக்கட்டும் கட்சிகளின் நிலையைப் பற்றி பார்க்கலாம். காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் கடினமான காரியமாக தெரியவில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த கட்சி என்ற பெயர். அகில இந்திய அளவில் தெரிந்த தலைவர்கள். நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் வேர்விட்டிருந்த கட்சி. பிராந்தியத் தலைவர்களும் அவர்களது மாகாணங்களில் மக்கள் செல்வாக்குடன் இருந்தனர். அனைத்துக்கும் மேல் பிரதமர் நேரு இருக்கிறார். அவரது பிரச்சாரத்திற்கே மக்களது வாக்குகள் பெருமளவில் திரளும். மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ்.

2. கம்யூனிஸ்ட்

களத்தில் வேறு சில கட்சிகளும் இருந்தன. குறிப்பாக கம்யூனிஸ்ட். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தையும் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து மிகத்தீவிரமாக இயங்கி வந்த இயக்கம். ஆனால் தேர்தலின் போது அகில இந்திய அளவில் சற்று பலவீனமாகவே இருந்தது. 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கல்கத்தாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு நடந்தது. அப்போது, ஆயுதப் புரட்சியின் மூலம் நேருவின் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு மாற்று அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அமிர்தசரசில் நடந்த மூன்றாவது மாநாட்டில் இம்முடிவு தவறானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும் பல்வேறு பகுதிகளிலும் கம்யூனிஸ்டு தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்த சூழலில் தேர்தலை சந்தித்தது கம்யூனிஸ்ட்.

3. பாரதிய ஜனசங்கம்

அடுத்ததாக பாரதிய ஜனசங்கம்.. ஏப்ரல் 8 1950 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானும் இடையே நேரு-லியாகத் ஒப்பந்தம் அல்லது டெல்லி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே சியாம பிரசாத் முகர்ஜிக்கும் நேருவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் இருந்த சூழலில் இந்த ஒப்பந்தம் மேலும் வேறுபாடுகளை அதிகரித்தது. முடிவில் நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகிய அவர் ஆர் எஸ் எஸ் சங்கத்தின் தலைவர் கோல்வாக்கருடன் கலந்தாலோசித்து பாரதிய ஜனசங்கத்தை நிறுவினார்.

புதிய கட்சி. கட்சிக்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ பெரிய அனுபவம் ஏதும் இல்லை. இருந்தபோதும் காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்ள தயாரானது ஜனசங்கம். காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளை வெல்ல மக்கள் பாரதிய ஜனசங்கத்தின் பின்னால் அணிதிரள வேண்டுமென்பதே பிரதான பிரச்சாரம்.

கிஷான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி

அடுத்தது கிஷான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி.. தமிழில் விவசாயத் தொழிலாளர் மக்கள் கட்சி. தலைவர் ஜீவத்ராம் பகவான்தாஸ் 'ஆச்சார்யா' கிருபலானி. சுருக்கமான ஜேபி கிருபாளினி. தீவிர காந்தியவாதியான இவர் 1934-1945 வரை காங்கிரஸின் பொதுச் செயலாளராக பணியாற்றினார் மற்றும் 1946 இல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கட்சிக்குள் மகாத்மா காந்தியைத் தவிர நேரு உள்ளிட்ட பல தலைவர்களுடன் சித்தாந்த முரண்பாடுகள் இருந்தன. பின் 1951ல் கிஷான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி எனும் கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியும் தேர்தலில் போட்டியிடத் தயாரானது.

இன்னும் சில கட்சிகள்., டாக்டர் அம்பேத்கரின் அகில இந்திய பட்டியலின சாதியினர் சம்மேளனம், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷலிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என 14 தேசிய கட்சிகள் களத்தில் இருந்தன.

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 25 அக்டோபர்1951 முதல் பிப்ரவரி 21 1952 வரை நடந்தது. மொத்தமிருந்த 173,212,343 வாக்காளர்களில் 105,950,083 புதிதாக வாக்களிக்க இருப்பவர்கள்.

அரக்க பரக்க நடந்தது தேர்தல் பிரச்சாரங்கள். ஒவ்வொரு கட்சியும் மாற்றுக்கட்சியினரை மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டனர். நாங்கள் இத்தனையையும் செய்தோம் என காங்கிரஸ் சொன்னால், நாங்கள் வந்தால் இத்தனையையும் செய்வோம் என சொன்னது மற்ற கட்சிகள்.

காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி

தேர்தலும் முடிந்தது. 45% வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 489 இடங்களில் 10 இடங்கள் தவிர அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்த காங்கிரஸ் கட்சிக்கே பெரும்பான்மையான வெற்றி. மொத்தமாக 364 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றிருந்தது. மொத்தமிருந்த 25 மாகாணங்களில் 18 மாகாணங்களை தன் வசம் வைத்தது காங்கிரஸ்.

மொத்தமாக 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் எதிர்க்கட்சியானது கம்யூனிஸ்ட் கட்சி. இந்த வெற்றிக்கு மெட்ராஸ் மாகாணம் மிக முக்கியக் காரணம். அங்குமட்டும் மொத்தம் 8 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. மேற்கு வங்கத்தில் 5 இடங்களையும், திரிபுராவில் 2 இடங்களையும், ஒரிசாவில் 1 இடத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி வென்றிருந்தது.

254 இடங்களில் போட்டியிட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷைலிஸ்ட் கட்சி 12 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. 145 இடங்களில் போட்டியிட்ட கிஷான் மஸ்தூர் பிரஜா 9 இடங்களிலும், இந்து மகாசபா 4இடங்களையும், அகில இந்திய ராம் ராஜ்ய பரிஷத், பாரதிய ஜனசங்கம் போன்ற கட்சிகள் 3 இடங்களை வென்றிருந்தது. டாக்டர் அம்பேத்கரின் அகில இந்திய பட்டியலின சாதியினர்ன் சம்மேளனம் 35 தொகுதிகளில் போட்டியிட்டு இரு இடங்களில் மட்டுமே வென்றிருந்தது.

பதவியேற்ற அரசு

ஏப்ரல் 4 1952 இல் பிரதமர் நேருவின் அரசு பதவியேற்றது. மே 13 1952 ஆம் ஆண்டு 15 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது. கேபினெட் உறுப்பினர்களாக அல்லாமல் மேலும் 4 பேர் அமைச்சர்களாக செயல்பட்டனர். அந்த அமைச்சரவையின் பதவிக்காலம் அதன் முழு அளவான ஏப்ரல் 4 1957 வரை நீடித்தது. முதல் மக்களவையின் சபாநாயகாரக ஜிவி மாவலங்கர் செயல்பட்டார். முதல் மக்களவையில் மொத்தமாக 677 அமர்வுகள் நடந்தது. மணி நேரமாக சொல்ல வேண்டுமென்றால் 3784 மணி நேரங்கள்.

வகுப்புவாதத்தால், பிரிவினையால் பாதிக்கப்பட்ட ஒரு தேசம், உணவுப் பற்றாக்குறை, அகதிகள் பிரச்சனை, இந்தியாவுடன் இணைக்கப்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடனே பிரச்சனைகள் இன்றி வைத்திருப்பது என ஏகப்பட்ட விவாகரங்களுக்கு இடையேதான் இந்தியா தேர்தலை நடத்தியது. ஆனாலும், பெரிய பிரச்சனைகள் ஏதும் இன்றி இந்தியா தனது முதல் ஜனநாயக தேர்வை வென்றிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com