கென்யாவிடமிருந்து இந்தியா அதிகளவில் தேயிலை இறக்குமதி... வேதனையில் உள்நாட்டு வர்த்தகர்கள்!
கென்யாவிடம் இருந்து அதிக தேயிலையை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு, கென்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலை அளவு, இந்த ஆண்டு 288 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 35 லட்சத்து 30 ஆயிரம் கிலோ அளவுக்கு கென்யாவில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு (2024) இதே காலகட்டத்தில் ஒரு கோடியே 37 லட்சம் கிலோ அளவுக்கு தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், சீனாவுக்கு அடுத்தபடியாக கென்யாவிடமிருந்து அதிக தேயிலையை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில், இந்த இறக்குமதியால் உள்ளூர் தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கவலையடைந்து உள்ளனர்.
இந்தியாவில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து அதிக அளவில் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனினும், விலை அதிகரிப்பு காரணமாக வணிகப் பிரச்னையில் போராடி வருகிறது. கென்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையின் சராசரி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.156.73 ஆக உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின்போது அசாம் தேயிலை ஒரு கிலோ ரூ.252.83க்கு விற்கப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கென்ய நாடு தரம் குறைந்த தேயிலையை அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. புருண்டி, மலாவி, தான்சானியா மற்றும் உகாண்டா தான்சானியா போன்ற பிற ஆப்பிரிக்க நாடுகளின் தரம் குறைந்த தேயிலைகள் கென்யாவில் உள்ள மொம்பாசா தேயிலை ஏல மையத்தின் மூலம் இந்தியாவை வந்தடைகிறது வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
முன்னதாக குவாகத்தி தேயிலை ஏல வாங்குவோர் சங்கத்தின் செயலாளர் “ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையை அந்நாட்டு அரசு விதித்துள்ளதால், சுமார் 119 மில்லியன் கிலோ கென்ய தேயிலை ஒரு வருடமாக விற்பனையாகாமல் உள்ளது” என்று தினேஷ் பிஹானி தெரிவித்திருந்தார். அப்படி அங்கு விற்பனையாகாமல் இருக்கும் தேயிலைகள், இங்கே அனுப்பப்படுவதாக தற்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.