நிலுவைத்தொகை ரூ.37 கோடி வழங்காததால் தேயிலை விவசாயிகள் பாதிப்பு
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 37 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, இடைத்தரகர்களிடம் பிடித்தம் செய்து வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சிறு, குறு தேயிலை விவசாயிகள், வழங்கும் பசுந்தேயிலைக்கு, தொழிற்சாலைகள் வழங்க வேண்டிய விலையை, மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு முடிவு செய்வது வழக்கம்.ஆனால், பல மாதங்களாக இந்தக் குழு நிர்ணயம் செய்த தொகைக்கு குறைவாகவே பல தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு பணம் வழங்குகின்றன. அதனையடுத்து, கடந்த டிசம்பர் 2015ஆம் ஆண்டிலிருந்து இந்தாண்டு ஏப்ரல் வரை தேயிலை தொழிற்சாலைகள், விவசாயிகளுக்கு 37 கோடி ரூபாய் வழங்க வேண்டியது தெரியவந்துள்ளது. அதனையடுத்து, தொழிற்சாலைகளின் தேயிலை தூளை விற்பனை செய்யும் இடைத்தரகர்களிடமிருந்து பிடித்தம் செய்து அந்தத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தவிட்டுள்ளது. இதற்கு தொழிற்சாலைகள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.