ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில்வே கட்டணம் உயர்வு., புதிய கட்டண விவரம் என்ன?
நாடு முழுவதும் ரயில் கட்டணங்கள் வரும், டிசம்பர் 26 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திய ரயில்வே துறை கட்டணங்களை உயர்த்தி இருந்த நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் கண்டனங்களை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அந்த அறிவிப்பின் படி, ”சாதரண வகுப்பில் 215 கிலோ மீட்டர் தொலைவு வரை கட்டண உயர்வு இல்லை. இதற்கு மேற்பட்ட தொலைவுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களில் இது கிலோ மீட்டருக்கு 2 பைசாவாக இருக்கும். கட்டண உயர்வு மூலம் ஏசி அல்லாத வகுப்புகளில் 500 கிலோ மீட்டர் பயணத்திற்கு 10 ரூபாய் மட்டுமே கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். மேலும், இந்த கட்டண உயர்வு மூலம் ரயில்வேக்கு கூடுதலாக 600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அதேபோல, புறநகர மின்சார ரயில்களில் கட்டண உயர்வு இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, எரிபொருள் செலவு, பணியாளர் ஊதியம், ஓய்வூதிய செலவுகள் அதிகரித்துவிட்டதாகவும் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக மிகப்பெரிய தொகை செலவிடப்படுவதாகவும் இதனால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரயில்வேக்கு 2 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய கட்டண விகிதங்கள் வரும் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

