இந்தியன் ரயில்வே.. கொரானாவுக்கு முன், பின் - ஓர் ஒப்பீடு!!
பொதுப்போக்குவரத்தில் மக்களின் பயண விருப்பமாக இருப்பது ரயில்கள். கொரோனாவுக்கு முந்தைய 2019–20ஆம் நிதியாண்டில், தினமும் சராசரியாக 2 கோடியே 20 லட்சம் பேர் வீதம் 808 கோடியே 60 லட்சம் பேர் ரயில்களில் பயணித்தனர். ஆனால், 2020–21ஆம் ஆண்டு கொரோனா உச்சக்கட்டத்தில் இது 84 சதவீதத்துக்கும் மேல் சரிந்து 125 கோடியாகக் குறைந்தது. பின்னர் 2021– 22ஆம் ஆண்டு 352 கோடியாகவும், 2022– 23ஆம் ஆண்டு 640 கோடியாகவும், 2023– 24ஆம் ஆண்டு 680 கோடியாகவும், 2024– 25ஆம் ஆண்டு 729 கோடியாகவும் படிப்படியாக மீண்டது. 2025–26ஆம் நிதியாண்டில் 738 கோடி பயணிகள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கொரோனா காலக்கட்டத்துக்குப் பின்னர் ஏசி பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது. 2019ஆம் ஆண்டு18 கோடியாக இருந்த ஏசி பயணிகள் எண்ணிக்கை, 2024–25ஆம் ஆண்டு 35 கோடியே 51 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் 69 சதவீதத்திற்கும் அதிகமானோர் 3ஆம் வகுப்பு ஏசி பிரிவில் பயணித்துள்ளனர். நீண்ட தூர ரயில்களில் இரண்டாம் வகுப்பு பயணிகள் எண்ணிக்கை 2019–20ஆம் ஆண்டு முதல் 2024–25ஆம் ஆண்டு வரை சுமார் 17 சதவீதம் உயர்ந்துள்ளது. படுக்கை வசதியில் பயணிப்போர் எண்ணிக்கையும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை நெருங்குகிறது.
2019–20ஆம் ஆண்டு 50 ஆயிரத்து 669 கோடி ரூபாயாக இருந்த பயணிகள் வருவாய், 2020–21ஆம் ஆண்டு சுமார் 70 சதவீதம் சரிந்து 15 ஆயிரத்து 248 கோடியாக இருந்தது. 2021–22ஆம் ஆண்டு 39 ஆயிரத்து 214 கோடி ரூபாயாகவும், 2022–23ஆம் ஆண்டு 63 ஆயிரத்து 417 கோடி ரூபாயாகவும் இருந்தது. 2023– 24ஆம் ஆண்டு 70 ஆயிரத்து 693 கோடி ரூபாயாகவும், 2024–25ஆம் ஆண்டு 75 ஆயிரத்து 368 கோடி ரூபாயாகவும் உயர்ந்தது. 2025–26ஆம் ஆண்டில் 80 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

