‘விடைகொடு விடைகொடு மனமே..’ - வயநாட்டிலிருந்து கிளம்பிய ராணுவம்; Royal Salute-உடன் பிரியா விடை!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். ஜூலை 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட அந்த இரண்டு பெரும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்தனர். நிலச்சரிவில் உருக்குலைந்த முண்டக்கை, மேப்பாடி மற்றும் சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு விரைந்த ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு வீரர்கள் மீட்பு பணிகளை தொடர்ந்தனர்.
சம்பவத்தன்று காலை தொடங்கி இன்று வரை 10 நாட்களாக, இரவு பகல் பாராமல் உயிருக்கு போராடியவர்களை மீட்டது ராணுவம் உள்ளிட்ட மீட்புப்டை. மண்ணில் புதைந்து மாண்டவர்களை தோண்டித்தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்த வீரர்களுக்கு, கண்ணீரை நன்றியாக தந்தனர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்.
இதையும் படிக்க: “அவர் மீதும் தவறு இருக்கிறது”- வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து சாய்னா நேவால்
மண்ணில் புதைந்த மனித உடல்கள் மற்றும் உடல் உறுப்புகளை தேடித்தேடி எடுத்துக்கொடுத்த சம்பவங்கள் காண்போரை கண்கலங்கச் செய்தது. எல்லா இன்னல்களுக்கும் இடையே, சரியான உணவைக் கூட எடுத்துக்கொள்ளாமல் பிஸ்கெட், பிரெட் உள்ளிட்ட உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இரவுபகலாக உழைத்தனர் மீட்பு வீரர்கள். அத்தனையையும் தாண்டி, நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட முண்டக்கை சூரல்மலையை இணைக்கும் விதமாக 31 மணி நேரமாக போராடி 190 அடி தூரம் கொண்ட தற்காலிக பாலத்தையே அமைத்து சாதித்தனர் ராணுவ வீரர்கள்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒருசிலர் உயிரோடு மீட்கப்பட்டனர். இவ்வாறாக பணி செய்த ராணுவம், தங்களது பணியை முடித்துக்கொண்டு நேற்று (ஆக 8, 2024) விடைபெற்றுள்ளது. அவர்களுக்கு தேசிய கீதம் முழங்க, கைத்தட்டி கண்ணீரோடு விடைகொடுத்துள்ளனர் கேரள மக்கள்.
இதுதொடர்பாக நெகிழ்ச்சி தெரிவித்த கேரள அமைச்சர் முகமது ரியாஸ், “இத்தனை நாட்களாக உடலும் உள்ளமுமாக இருந்த ராணுவத்தினர் எங்களை விட்டுச்செல்வது வருத்தமளிக்கிறது. ஆனால், அவர்கள் தங்களது பணியை செவ்வனே செய்து முடித்துள்ளனர். இங்கு வந்த பிறகு ஒரு உயிர் கூட போகாமல் பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கு வேறு பணிகள் இருப்பதை உணர்கிறோம். இந்த நேரத்தில் எங்கள் நன்றி அவர்களுக்கு உரித்தாகட்டும்” என்றுள்ளார்.
இன்னும் காணாமல் போனவர்கள் சிலரை கண்டுபிடிக்காத நிலையில், 12 பேர் கொண்ட ராணுவ குழு கேரள போலீஸாருடன் பணியை தொடர்கின்றனர். பெரும் துயரத்தில் பங்கேற்று மீட்புப்பணிகளை செய்த ராணுவத்திற்கு கேரள மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசமே நன்றியை தெரிவித்துள்ளது.