இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் அப்பாவிகள் உயிரிழப்புக்கு இந்தியா கடும் கண்டனம்
காணொலி மூலம் இந்தியா நடத்தி வரும் GLOBAL SOUTH SUMMIT மாநாட்டில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார்.

மேற்கு ஆசிய நிலவரம் காரணமாக புதிய சவால்கள் உருவாகியுள்ளதாக கூறிய அவர், தெற்காசிய நாடுகள் ஒருமித்த குரலில் உலக நன்மைக்காக பேச வேண்டிய தருணம் இது என்றார். இஸ்ரேல், ஹமாஸ் மோதலால் எழுந்துள்ள சூழலை சமாளிக்க கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ஒத்துழைப்பு மூலம் கட்டுப்பாடு சாத்தியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா கண்டிக்கும் அதே நேரத்தில், இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான மோதலில் அப்பாவிகள் பலியாவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருவதாகவும் மோடி கூறினார்.
ஜி20 மாநாட்டின்போது ஆப்ரிக்க யூனியன் நாடுகள் அந்த அமைப்பில் சேர்க்கப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றும் பிரதமர் தெரிவித்தார். குளோபல் சவுத் அமைப்பின் தலைமைப் பதவி வகிப்பதன் மூலம் இந்தியா நடத்திய சாதனைகளையும் நரேந்திர மோடி பட்டியலிட்டார்.