OPERATION SINDOOR | 1971-க்குப் பின் போர் பதற்றம்? இருநாட்டு தலைவர்கள் சொல்வதென்ன? முழு தகவல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்22ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. பாகிஸ்தான் அரசாங்கம் இந்த விவகாரத்தில் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், நடுநிலை விசாரணைக்கும் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு இரு வாரங்களுக்குப் பிறகு இன்று அதிகாலை (07/05/25) பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு நாடுகளும் ஏற்கனவே பலமுறை போரில் ஈடுபட்டுள்ளன. ஆனால், 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு பல நேரம் போர் பதற்றம் சூழ்ந்திருந்தாலும் போர் மூண்டதில்லை. இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிந்தூர் என்பது குங்குமத்தின் இந்தி வார்த்தையாகும். தாக்குதல் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் திட்டமிடப்பட்ட 9 இடங்களைக் குறிவைத்ததாகவும், பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் எதுவும் தாக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அவற்றைச் செயல்படுத்தும் முறையிலும், இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கம் இதுதொடர்பாகக் கூறுகையில், இது தூண்டுதலற்ற மற்றும் வெளிப்படையான போர் நடவடிக்கை என்றும் பாகிஸ்தானின் இறையாண்மையை மீறியது என்றும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், “இந்தியாவால் திணிக்கப்பட்ட இந்த போர் நடவடிக்கைக்கு வலுவான பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் பேசுகையில், இந்தியாவின் தாக்குதலுக்கு அதற்கேற்ப பதிலளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரிப், மீட்புக் குழுக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனைகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மாகாணத்திலுள்ள கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஜம்மு பகுதிகளிலுள்ள ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் முழுவதிலுமுள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என ஜம்மு பிரிவு ஆணையர் தெரிவித்துள்ளார்.