\
Future Combat Air System
Future Combat Air SystemReuters

யார் கண்ணிலும் சிக்காமல் தாக்குதல்.. இரு அசுரனை இறக்கும் இந்தியா.. எதிரி நாடுகளுக்கு பெரும் சவால்!

ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் எல்லை பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா, உள்நாட்டு 5-ஆம் தலைமுறை AMCA உற்பத்தியையும் பிரான்ஸ் FCAS 6-ஆம் தலைமுறை கூட்டாண்மையையும் ஒரே நேரத்தில் வேகப்படுத்துகிறது.
Published on
Summary

இந்தியா எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த அணு ஆயுதங்கள், அதிநவீன ஏவுகணைகள், துல்லியத் தாக்குதல் வெடிமருந்துகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றை வேகமாக குவித்து வருகிறது. ‘ஆத்மநிர்பார் பாரத்’ கொள்கையால் உள்நாட்டு ராணுவ உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸின் 6-ஆம் தலைமுறை FCAS திட்டத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இந்தியாவின் வான்வெளிப் போர்திறனை புதிய நிலைக்கு கொண்டு செல்லும்.

செய்தியாளர்கள் - விமல் ஆத்விக் & மீரா

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நாட்டின் எல்லைப்பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் மட்டுமின்றி அணு ஆயுதங்களையும் இந்திய ராணுவம் குவித்து வருகிறது. அதே சமயம் ஆயுத இருப்பை விரைவாக மறுசீரமைத்து மேம்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது.

'ஆத்மநிர்பார் பாரத்' கொள்கையின் கீழ் உள்நாட்டு ராணுவ உற்பத்தியை வேகப்படுத்தி வருகிறது இந்தியா. குறிப்பாக அவசர ஆயுத கொள்முதல் முறைகளை பயன்படுத்தி அதிநவீன ஏவுகணைகள், துல்லியத் தாக்குதல் வெடிமருந்துகள் (Precision-Guided Munitions) மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பை இந்திய ராணுவம் கணிசமாக அதிகரித்து வருகிறது.

AMCA
AMCAAI

அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அரசு முன்னெடுத்து வரும் 'ஃபியூச்சர் காம்பாட் ஏர் சிஸ்டம்' (Future Combat Air System - FCAS) என்ற 6-ஆம் தலைமுறை போர் விமான மேம்பாட்டுத் திட்டத்தில் இணைவதற்குக் ஒருங்கிணைந்த முயற்சியை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தில் இணைவது குறித்து இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்திலான தொடக்கக் கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன..

செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த இயக்கம், எதிரி ரேடார்களில் சிக்காத அதிநவீன ஸ்டெல்த் (Stealth) தொழில்நுட்பம், சக்திவாய்ந்த ரேடார்கள் மற்றும் ஆளில்லா போர் ட்ரோன்களுடன் இணைந்து செயல்படும் அதிநவீன தொழில்நுட்பங்களை இந்திய விமானப்படைக்குக் கொண்டு சேர்ப்பது இக்கூட்டாண்மையின் முதன்மை நோக்கம்..

Future Combat Air System
Future Combat Air SystemReuters

நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை அறிக்கையில் இந்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய விமானப் படையின் தற்காப்புத் திறனை மேம்படுத்த இந்த 6-ஆம் தலைமுறை போர் விமானங்களை வாங்குவது மற்றும் இந்தியாவில் கூட்டு உற்பத்தி செய்வது தொடர்பான தெளிவான திட்டவரைவை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றக் குழு பாதுகாப்பு அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதே வேளையில், இந்தியாவின் சொந்த தயாரிப்பான 5-ஆம் தலைமுறை 'அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராப்ட்' (AMCA) திட்டத்தின் வடிவமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது அதன் உற்பத்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

AMCA
AMCAAI

வான்வெளிப் பாதுகாப்பில் ஒரே நேரத்தில் உள்நாட்டு 5-ஆம் தலைமுறை போர் விமான உற்பத்தியை விரைவுபடுத்துவதும், சர்வதேச அளவிலான பிரான்ஸின் 6-ஆம் தலைமுறை தொழில்நுட்பக் கூட்டாண்மையில் கால் பதிப்பதும் இந்தியாவின் எதிர்கால வான்வெளிப் போர்த்திறனுக்குப் பெரும் பலமாக அமையும். இது நாட்டின் நீண்டகால எல்லைப் பாதுகாப்பையும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் ராணுவ வலிமையையும் உயர்த்தும்.

Future Combat Air System
பிளவுற்றதா பாகிஸ்தான்.? ஆகஸ்ட் 11 சுதந்திர தினம்? 79 ஆண்டுகால வரலாறு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com