\
August 11 and Balochistan: Is history repeating after 79 years?
balochistanReuters

பிளவுற்றதா பாகிஸ்தான்.? ஆகஸ்ட் 11 சுதந்திர தினம்? 79 ஆண்டுகால வரலாறு!!

பலுசிஸ்தானுக்கு தனி நாடு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையுடன், பல தசாப்தங்களாக பல்வேறு பிரிவினைவாத ஆயுதக் குழுக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.
Published on

பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். பலூச்சி மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தப் பகுதி, பண்பாட்டு ரீதியாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் அதிக தொடர்பைக் கொண்டுள்ளது. பலுசிஸ்தானுக்கு தனி நாடு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையுடன், பல தசாப்தங்களாக பல்வேறு பிரிவினைவாத ஆயுதக் குழுக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.

பாகிஸ்தான் - பலுசிஸ்தான்
பாகிஸ்தான் - பலுசிஸ்தான்Pt web

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில், "பலுசிஸ்தான் சுதந்திரம் அடைந்துவிட்டதாக கூறப்படும் கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது. ஆனால், அவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல் தற்போது பலூச் தேசியவாத அமைப்புகள் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதியை "பலுசிஸ்தான் சுதந்திர தினம்" என்று அனுசரிக்க உலகம் முழுவதும் வாழும் பலூச் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

1947-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்த காலகட்டத்தில், கலத் (Khanate of Kalat) என்ற சமஸ்தானம், ஆகஸ்ட் 11-ஆம் தேதி தன்னை சுதந்திரமான அரசாக அறிவித்ததாக பலூச் தேசியவாதிகள் கூறுகின்றனர். பின்னர், 1948-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அந்த சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு சட்டபூர்வமானது என்றும், அன்றைய ஆட்சியாளர்கள் ஒப்புதல் அளித்தே நடந்தது என்றும் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அது ராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தின் கீழ் நடந்த கட்டாய இணைப்பு என பலூச் தேசியவாத அமைப்புகள் மறுத்து வருகின்றன.

பலுசிஸ்தான்
பலுசிஸ்தான் ANI

இதனையடுத்து, ஆகஸ்ட் 11-ஆம் தேதியை "பலுசிஸ்தான் சுதந்திர தினம்" என உலகளவில் அனுசரிக்கவும், பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்கவும் சர்வதேச நாடுகளுக்கு பலூச் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், தற்போதைய நிலையில் பலுசிஸ்தான், பாகிஸ்தானின் ஒரு மாகாணமாகவே ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட எந்த நாடும் பலுசிஸ்தானை தனி சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை. எனவே, ஆகஸ்ட் 11-ஐ முன்னிட்டு பலூச் அமைப்புகள் மீண்டும் சுதந்திரக் கோரிக்கையை வலுப்படுத்தியுள்ள நிலையில், பலுசிஸ்தான் விவகாரம் சர்வதேச அரசியல் அரங்கில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com