'இந்தியாவின் முக்கிய செயற்கைக்கோள் செயலிழப்பு..’ ஏற்படப்போகும் பாதுகாப்பு குறைபாடு!
இந்தியாவின் நேவிக் அமைப்பில் உள்ள IRNSS-1F செயற்கைக்கோள் செயலிழந்ததால், துல்லியமான இடத்தரவு சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ராணுவம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய பிரிவுகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவின் சொந்த இடத்தரவு செயற்கைக்கோள் அமைப்பான நேவிக்-இல் (NavIC) இடம்பெற்றிருந்த ‘ஐஆர்என்எஸ்எஸ் - 1 எஃப்’ (IRNSS-1F) செயற்கைக்கோள் செயலிழந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 2016இல் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோளின் அணுக்கடிகாரம் பழுதானதால் அதன் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 1999 கார்கில் போரின்போது அமெரிக்கா இடத்தரவு வழங்க மறுத்ததால், இந்தியா தனது தற்சார்புக்காக இந்த நேவிக் திட்டத்தை உருவாக்கியது.
தற்போது இந்த அமைப்பில் இருந்த நான்கு செயற்கைக்கோள்களில் ஒன்று முடங்கியதால், துல்லியமான சேவையை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ராணுவம், கடல் கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற முக்கியப் பிரிவுகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த இடைவெளியை நிரப்ப இந்தியா மீண்டும் அமெரிக்காவின் ஜிபிஎஸ் (GPS) அல்லது ஐரோப்பாவின் கலிலியோ (Galileo) அமைப்புகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நேவிக் அமைப்பை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர குறைந்தது இரண்டு புதிய செயற்கைக்கோள்களை ஏவ வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

