விண்வெளி வரலாற்றில் முதன்முறை | உத்தரவைப் பிறப்பித்த நாசா.. பூமிக்குத் திரும்பிய வீரர்கள்!
விண்வெளி வரலாற்றில் முதன்முறையாக திட்டமிடப்பட்ட நாள்களுக்கு முன்னதாகவே உடல்நலக் குறைவால் நாசா விண்வெளி வீரர்கள் பூமி வந்தடைந்தனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் போட்டிபோட்டு உலக விண்வெளி வீரர்கள் பலரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாசாவைச் சேர்ந்த மைக் பிங்கி, ஜெனா கார்ட்மேன், ஜப்பானை சேர்ந்த கிமியா யூயி, மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் பிளாட்னாவ் ஆகிய நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி, ஆய்வுகள் மேற்கொண்டு வந்தனர். அவர்கள், ஆறு மாதங்கள் தங்கி, ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நால்வரில் ஒருவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நால்வரையும் பூமிக்கு திரும்புமாறு நாசா உத்தரவிட்டது. அதன்படி விண்கலத்தில் புறப்பட்ட நால்வரும் இன்று (ஜன. 15) காலை பத்திரமாக கலிபோர்னியா வந்தடைந்தனர். என்றாலும், யாருக்கு உடல்நலக் குறைவு என்பதையும், எம்மாதிரியான பிரச்னை என்பதையும் நாசா வெளியிடவில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தின் 26 ஆண்டுகால வரலாற்றில், மருத்துவ அவசரம் என்று கூறி, வீரர்கள் வெளியேற உத்தரவிட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

