ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா.. டிசம்பர் முதல் குறைக்க முடிவு!
ரஷ்யாவிலிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்குவதை அடுத்த மாதம் முதல் இந்தியா குறைத்துக்கொள்ளும் என கடல் வணிக சந்தை ஆய்வு நிறுவனமான கெப்ளர் (KPLER)தெரிவித்துள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாகும். இந்தியா தனது உள்நாட்டு கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்தது. ரஷ்யாவிடமிருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தவிர்க்க, அமெரிக்கா கோரியது. இந்தச் சூழலில் ரஷ்யா தனது கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் விற்பனை செய்யத் தொடங்கியது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக அதிகரித்தது.
ரஷ்யா -உக்ரைன் போருக்கு முன்பு இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு வெறும் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது அது 35 சதவீதமாக உயர்ந்து இந்தியாவுக்கான முன்னணி கச்சா எண்ணெய் விநியோக நாடாக ரஷ்யா உருவெடுத்துள்ளது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதன் காரணமாகவே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீதம் அளவுக்கு வரியை உயர்த்தினார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.
மேலும், அமெரிக்காவுடனான வர்த்தக உறவைச் சீர்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. தவிர, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என அமெரிக்காவும் கோரிக்கை வைத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிலிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் வாங்குவதை அடுத்த மாதம் முதல் இந்தியா குறைத்துக்கொள்ளும் என கடல் வணிக சந்தை ஆய்வு நிறுவனமான கெப்ளர் (KPLER)தெரிவித்துள்ளது. இதனால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க அமெரிக்கா, கனடா, பிரேசில், மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இதனால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கும் என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் இம்முடிவு சர்வதேச பொருளாதார உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உலக நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இன்னொருபுறம், இந்தியா முழுமையாக ரஷ்ய எண்ணெய்யை மட்டுமே நம்பி இருக்கிறது எனும் கருத்து தவறானது. உண்மையில், இந்தியா அமெரிக்காவிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவு எண்ணெய் இறக்குமதி செய்கிறது. 2024-ஆம் ஆண்டில், இந்தியா 7.7 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பெட்ரோலிய பொருட்களை வாங்கியது. இதில் 4.8 பில்லியன் மதிப்பிலான டாலர் கச்சா எண்ணெயும் அடங்கும். அமெரிக்கா தவிர, ஈராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா, அங்கோலா போன்ற பல ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும், பல மேற்கத்திய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் இந்தியா கணிசமான கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பெறுகிறது.

