பாகி.ற்கு மேலும் நெருக்கடி.. செனாப் நதியில் புதிய நீர்மின் திட்டம்.. பச்சைக்கொடி காட்டிய இந்தியா!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்துள்ள நிலையில், செனாப் நதியில் புதிய நீர்மின் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு இந்திய மற்றும் பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, கெடுபிடிகளும் விதிக்கப்பட்டன. அந்த வகையில், ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது. 1960 செப்டம்பரில் பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கையெழுத்தான இந்த சிந்து நதி ஒப்பந்தம், அந்நதிப் படுகையின் ஆறு நதிகளின் நீர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் விநியோகிக்கப்படுகிறது என்பதை நிர்வகிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் மேற்கில் அமைந்துள்ள மூன்று ஆறுகளின் - சிந்து, ஜீலம் மற்றும் செனாப் - 80 சதவிகித தண்ணீர் பாகிஸ்தானுக்கு செல்கிறது. பாகிஸ்தானின் 80 சதவிகித விவசாயம் இந்த தண்ணீரை நம்பிதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், செனாப் நதியில் இன்னொரு நீர் மின் திட்டத்தை உருவாக்க மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. தற்போது புதிதாக 260 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் துலாஸ்தி நிலை 2 என்ற இரண்டாவது மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்நிலை நீா் மின் திட்டத்திலிருந்து 3,685 மீட்டா் நீளம் மற்றும் 8.5 மீட்டா் அகலம் உடைய தனி சுரங்கப்பாதை மூலமாக நதிநீா் திசைதிருப்பப்பட்டு புதிய இரண்டாம் நிலை திட்டத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த 60.3 ஹெக்டோ் நிலம் தேவைப்படும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 3,200 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பசுமைக் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தம் விடும் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த நதியில் 390 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் கூடிய நீா் துலாஸ்தி நிலை 1 என்ற பெயரிலான மின் திட்டம் மூலம், கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் மின் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஷெர்ரி ரெஹ்மான், “இது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறுகிறது. சர்ச்சைக்குரிய நதிகள் மீதான எந்தவொரு ஒருதலைப்பட்ச நடவடிக்கையும் பாகிஸ்தானின் அங்கீகரிக்கப்பட்ட நீர் உரிமைகளை நேரடியாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா தொடா்ந்து மீறுவதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

