”சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால்..” - பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுகிறது. தவிர, இருதரப்பிலும் மாறிமாறி கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ”சிந்து நதியின் நீரை இந்தியாவிற்குத் திருப்பிவிடுவதற்காகக் கட்டப்படும் எந்தவொரு கட்டமைப்புகளும் அழிக்கப்படும்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், "இந்தியா அத்தகைய கட்டமைப்பை (அணையை) உருவாக்க முயற்சித்தால், பாகிஸ்தான் அதை அழித்துவிடும். சிந்து நதியில் எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவது பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஆக்கிரமிப்பாக பார்க்கப்படும். ஆக்கிரமிப்பு என்பது பீரங்கிகளையோ அல்லது தோட்டாக்களையோ சுடுவது மட்டுமல்ல; அதற்கு பல முகங்கள் உள்ளன. அந்த முகங்களில் ஒன்று தண்ணீரைத் தடுப்பது அல்லது திசை திருப்புவது ஆகும். இது பசி மற்றும் தாகத்தால் மரணங்களுக்கு வழிவகுக்கும். அவர்கள் ஏதேனும் கட்டடக்கலை முயற்சியை மேற்கொண்டால், பாகிஸ்தான் அந்தக் கட்டமைப்பை இடித்துவிடும். ஆனால் இப்போதைக்கு, IWT [சிந்து நீர் ஒப்பந்தம்] தொடங்கி, எங்களுக்குக் கிடைக்கும் மன்றங்களுக்குச் செல்கிறோம். இந்த விஷயத்தை நாங்கள் தொடருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நதிநீர் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடு பாதிக்கப்படும் என்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், தண்ணீரை நிறுத்தும் எந்தவொரு முயற்சியையும் போர் நடவடிக்கை எனத் தெரிவித்திருந்தார். அதுபோல், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி, சிந்து நதியில் தண்ணீர் ஓடவில்லை என்றால், இரத்தம் ஓடும் என எச்சரித்திருந்தார்.