இந்தியாவுக்கு 18% வரி.. சீனா, பாகிஸ்தானைவிட குறைவு.. ஆனால்? அமெரிக்காவின் திட்டம் என்ன?
இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட மற்ற முக்கிய ஆசியப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து மிகக் குறைந்த வரி விகிதங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இந்தியாவுக்கு 18% வரி விதிப்பு
அமெரிக்காவுக்கான வரி அதிகளவில் இருந்ததாலும், இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதாலும் அமெரிக்கா, இந்தியாவுக்கு 50% வரி விதித்திருந்தது. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வராத நிலையில், இது தொடர்ந்தது. இந்த நிலையில், இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மோடியுடனான பேச்சுவார்த்தையில், பிரதமர் மோடி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்திவிட்டு, வெனிசுலாவிருந்து அதிக எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டுள்ளார்‘ என தெரிவித்துள்ளார். இதற்கு இந்தியப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி, ரஷ்ய எண்ணெய்யை வாங்கியதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத 'பதிலடி' வரியின் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத தண்டனை வரியை அமெரிக்கா ரத்து செய்கிறது.
இந்த நிலையில், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்தைவிட இந்தியா வரி நன்மையைப் பெற்றுள்ளது. அதாவது, இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட மற்ற முக்கிய ஆசியப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து மிகக் குறைந்த வரி விகிதங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. சீனாவுக்கு 37 சதவீதமும், வங்கதேசத்திற்கு 20 சதவீதமும், பாகிஸ்தானிற்கு 19 சதவீதமும் அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு அதை 18 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது பாகிஸ்தானைவிட 1 சதவீதமும், வங்கதேசத்தைவிட 2 சதவீதமும் குறைவாக உள்ளது. அதேநேரத்தில் சீனாவைவிட 19 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வரி விகிதம், இந்தியா அமெரிக்காவிடம் கொண்டிருக்கும் நெருக்கத்தை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.
புதிய வரிகள் எப்போது அமலுக்கு வரும்?
எனினும், இந்தப் புதிய வரிகள் எப்போது அமலுக்கு வரும் எனக் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், வர்த்தக தடைகள் எவ்வாறு குறைக்கப்படும் என்பது குறித்தும், இந்தியா எத்தகைய அமெரிக்க தயாரிப்புகளை வாங்க உறுதியளித்தது என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. இந்தியா, ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலை நிறுத்திவிட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து ரஷ்யாவும் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. ஜப்பான் மற்றும் தென் கொரியா உட்பட மற்ற முக்கிய ஆசிய வர்த்தகப் பங்காளிகளுடனான முந்தைய வர்த்தக ஒப்பந்தங்களில், அமெரிக்கத் தொழில்களில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதற்கான உறுதிமொழிகள் இடம்பெற்றிருந்தன, ஆனால் இந்தியாவின் அறிவிப்பில் எந்தவொரு குறிப்பிட்ட முதலீடுகள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்தப் புதிய வரி அமைப்பின் மூலம், அமெரிக்காவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பல நாடுகளைவிட இந்தியா இப்போது ஒரு சிறந்த நிலையில் உள்ளது. மேலும் இந்த புதிய வரிவிதிப்பு, அமெரிக்க சந்தையில் இந்திய ஏற்றுமதிகளை மலிவானதாகவும், அதிக போட்டித்தன்மை கொண்டதாகவும் ஆக்குகிறது. மறுபுறம், அமெரிக்கப் பொருட்களுக்கான வரி மற்றும் வரியல்லாத தடைகளை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் 96 சதவீதத்திற்கும் அதிகமான வர்த்தகப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்கும் அல்லது நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், அமெரிக்க - இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அமெரிக்கா மற்று நாடுகளுக்கு விதித்த வரி விகிதங்கள்
அமெரிக்காவிலிருந்து அதிகபட்ச வரிகளை எதிர்கொள்ளும் நாடுகளில் பிரேசில் (50 சதவீதம்), மியான்மர் (40 சதவீதம்), லாவோஸ் (40 சதவீதம்), சீனா (37 சதவீதம்) மற்றும் தென்னாப்பிரிக்கா (30 சதவீதம்) ஆகிய நாடுகள் அடங்கும். தென்கிழக்கு ஆசியாவிற்குள், அதிக வரிகளை எதிர்கொள்ளும் நாடுகளில் வியட்நாம் (20 சதவீதம்), பங்களாதேஷ் (20 சதவீதம்), பாகிஸ்தான் (19 சதவீதம்), மலேசியா (19 சதவீதம்), கம்போடியா (19 சதவீதம்) மற்றும் தாய்லாந்து (19 சதவீதம்) ஆகியவை அடங்கும். அமெரிக்காவுடன் மிகக் குறைந்த வரி ஒப்பந்தங்களைக் கொண்ட நாடுகளில் ஐக்கிய இராச்சியம் (10 சதவீதம்), ஐரோப்பிய ஒன்றியம் (15 சதவீதம்), சுவிட்சர்லாந்து (15 சதவீதம்), ஜப்பான் (15 சதவீதம்) மற்றும் தென் கொரியா (15 சதவீதம்) ஆகியவை அடங்கும்.

