இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை.. ஒப்பந்தத்தை இறுதிசெய்ய திட்டம்!
இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஜூலை 9ஆம் தேதிக்கு முன் இறுதி செய்ய இருநாடுகளும் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய அதிகாரிகள் விரைவில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. முன்னதாக, உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதில் வரி விதித்த நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி தங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 26 சதவீத கூடுதல் வரி அறிவித்தார். ஆனால், அதனை அமெரிக்க 90 நாட்களுக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், ஜூலை 9ஆம் தேதி முதல் 26 சதவீத வரிவிதிப்பு அமலுக்கு வரும் நிலையில், முன்னதாகவே இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, இந்தியா அந்த கூடுதல் வரியிலிருந்து முழுமையான விலக்கு கோரியுள்ளது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை, நகை, தோல், வாழை போன்றவைகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது. ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தில், தொழில், மின்சார வாகனங்கள், விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் அமெரிக்கா சலுகைகள் கோரியுள்ளது.