I-N-D-I-A கூட்டணி | திமுகவின் ஆதரவை எதிர்பார்க்கும் ராகுல்.. விமர்சித்த பினராயி விஜயன்!
இந்தியாவின் பன்முகத் தன்மையைக் காக்க திமுக, எதிர்க்கட்சிகளுக்குத் துணை நிற்கும் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ள நிலையில், கொள்கை அளவில் திமுக I-N-D-I-A கூட்டணியை ஆதரிக்கும் என்ற வகையில் ராகுல் பேசி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற I-N-D-I-A கூட்டணி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய உரையின் ஒரு பகுதியை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்று பாஜக பொய்ப் பிரச்சாரம் செய்வதாகக் குற்றம்சாட்டிய ராகுல், ” ‘இந்தியா’ என்ற கருத்தியலைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிற்கும் என்றும், அதற்கு திமுகவும் துணையாக இருக்கும் என தன்னால் 100 சதவீதம் உறுதியளிக்க முடியும்” என்றும் தெரிவித்தார். மத்திய அரசு மீது மக்களிடம் கோபம் அதிகரித்து வருகிறது என்றும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்துவது எளிது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேசமயம், அடுத்த தேர்தல் நேர்மையாக நடக்காது என்றும் அவர் எச்சரித்தார். தேர்தல் ஆணையம், சிபிஐ, நீதிமன்றங்கள் போன்ற அரசு அமைப்புகள் அனைத்தும் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தேர்தல் முறைகேடுகளில் பாஜக ஈடுபடும் என்றும், எனவே தங்களின் பழைய அரசியல் உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், காங்கிரஸ் கட்சி மீது கூட்டணிக் கட்சிகள் வைக்கும் அனைத்து விமர்சனங்களையும், நஞ்சை உண்ட சிவபெருமான் போலப் புன்னகையுடன் ஏற்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அனைவரையும் அன்போடு ஒருங்கிணைப்பதே காங்கிரஸின் கடமை என்றார்.
சமீபத்தில் நடைபெற்ற I-N-D-I-A கூட்டணிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதபோதும், ராகுல் காந்தி நம்பிக்கையோடு பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், ராகுல் காந்தியின் செயல்பாடுகள் I-N-D-I-A கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் இல்லை என கேரள முன்னாள் முதல்வரும் மார்க்ஸிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற I-N-D-I-A கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை குறித்து தாங்கள் மட்டுமல்லாமல் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் விமர்சித்ததாக பினராயி விஜயன் பேசினார். கோழிக்கோட்டில் பேசிய அவர், திமுக தற்போது எங்கே இருக்கிறது என்று மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார். I-N-D-I-A கூட்டணியின் தற்போதைய நிலைக்கு ராகுல் காந்தியே காரணம் என்றும் அவரது செயல்பாடுகள் பாஜகவுத்தான் பலன் தரும் என ஏற்கெனவேதான் கூறியதாகவும் அதுதான் தற்போது நடந்துவருவதாகவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.

