இந்திய விமானச் சேவைகளில் குளறுபடிகள்.. ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்!
இந்தியாவில் பல்வேறு விமானங்கள், விமான நிலையங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைகள் நிறைந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருந்தது. அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து உலகையே அதிரவைத்த நிலையில் இதைத் தொடர்ந்து இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய விமானப்போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வு செய்தது. விமான இயக்கங்கள், தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களின் செயல்பாடு, தகவல் தொடர்பு வசதிகள், விமான பரிசோதனைகள் என பல்வேறு அம்சங்கள் தணிக்கை செய்யப்பட்டன.
இதில் தேய்ந்து போன டயர்களுடன் பறந்த விமானம், ஓடுபாதை கோடுகள் அழிந்திருப்பது, பராமரிப்பு தொடர்பான வழிகாட்டு விதிகள் பின்பற்றபடாதது என பல்வேறு குறைபாடுகள் தெரியவந்தன. முக்கியமான தரவுகளை பதிவு செய்யாததும் மென்பொருட்கள் மேம்படுத்தப்படாமல் இருந்ததும் தணிக்கையில் தெரியவந்துள்ளது. மும்பை, டெல்லி போன்ற மிக முக்கிய விமான நிலையங்களில் கூட பிரச்சினைகள் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்பிரச்சினைகள் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும் என விமான நிறுவனங்களுக்கும் விமான நிலைய நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.