”இந்தியாவுக்கு எல்லை ஒன்றுதான்.. ஆனால் எதிரிகள் மூன்று பேர்” - லெப்டினன்ட் ஜெனரல்!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின்போது 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கி பதிலடி கொடுத்தது. இந்தியாவின் பதிலடியின் விளைவாக ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட குழுக்களுடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசியது. இதை எதிர்கொண்ட இந்தியா, அதற்கும் தக்க பதிலடி கொடுத்தது. இதற்கிடையே இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் ஏற்பட்டு தாக்குதல் நிறுத்தப்பட்டது. எனினும், இருதரப்பிலும் இன்னும் பதற்றங்கள் அதிகரித்தப்படியே உள்ளன.
இந்த நிலையில், ”தான் தயாரிக்கும் ஆயுதங்களைச் சோதனை செய்து பார்க்கும் களமாக பாகிஸ்தானை சீனா பயன்படுத்துகிறது'' என லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “நமக்கு ஓர் எல்லையும் இரண்டு எதிரிகளும் இருந்தனர். ஆனால், உண்மையில் எதிரிகள் மூன்று பேர் இருந்தனர். பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது. சீனா சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கி வந்தது. தான் தயாரிக்கும் ஆயுதங்களைச் சோதனை செய்து பார்க்கும் களமாக பாகிஸ்தானை சீனா பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் நாட்டின் மொத்த ஆயுதங்களில் 81 சதவீதம் சீனா வழங்கியது. துருக்கியும் பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தது. ராணுவத்துக்கு ஒரு வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு தேவை. தொழில்நுட்பம் பயன்படுத்தியும், உளவுத்தகவலை பயன்படுத்தியும், பாகிஸ்தானில் 21 பயங்கரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 9 இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன. நாம் ஒரு ராணுவ இலக்கை அடையும்போது, அதை நிறுத்த முயற்சிக்க வேண்டும். போரைத் தொடங்குவது எளிது, ஆனால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI)படி, ’சீனா 2015 முதல் பாகிஸ்தானுக்கு 8.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. 2020 மற்றும் 202க்கு இடையில், சீனா உலகின் நான்காவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அல்லது 63 சதவீதம் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளது. இது இஸ்லாமாபாத்தை சீனாவின் மிகப்பெரிய ஆயுத வாடிக்கையாளராக மாற்றியது. இந்த வர்த்தகத்தில் சீனாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட JF-17 தண்டர் மற்றும் மேம்பட்ட J-10C மல்டிரோல் போர் விமானங்களால் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானின் போர் விமானங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அடங்கும். பாகிஸ்தான் இப்போது சீனாவிலிருந்து 40 ஷென்யாங் J-35 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை சேர்க்க உள்ளதாகவும், இது ஸ்டெல்த் போர் திறன் கொண்ட வரையறுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் இடம்பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், 2025ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (DIA) சமீபத்திய அறிக்கை, ”இந்தியா சீனாவை அதன் முதன்மை எதிரியாக கருதுகிறது என்றும், பாகிஸ்தான் நிர்வகிக்க வேண்டிய துணை பாதுகாப்பு பிரச்னையாக பார்க்கப்படுகிறது என்றும் கூறுகிறது.