கனடாவில் தஞ்சம்: விரிசலால் இந்தியர்களின் எதிர்காலம், வர்த்தக உறவு எப்படி அமையும்?

கனடாவிற்கு இந்தியாவிலிருந்து சீக்கியர்களைத் தவிர தமிழர்களும் அதிகளவில் செல்கின்றனர்.
கனடா
கனடாபுதிய தலைமுறை

கனடா - இந்தியா உறவில் அதிகரிக்கும் விரிசல்!

காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடா - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று (செப். 22) அளித்த பேட்டி ஒன்றில், ”இந்த விஷயத்தை (நிஜ்ஜார் விவகாரம்) இந்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் முழு வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தவும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்தவும் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றவர், ‘இந்தியாவின் விசா ரத்து நடவடிக்கை’ குறித்த கேள்விக்கு, ”கனடிய குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், நமது மதிப்புகள் மற்றும் சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்தவும் தேவையான பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம். இப்போது எங்கள் கவனம் அதுதான்” எனத் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியாவின் தலையீடு: தகவலைக் கசியவிட்ட கனடா!

இந்த நிலையில், கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் வகையில் இந்திய தூதரக அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் உள்ளிட்டவை குறித்த தகவலை அந்த நாட்டு அரசு கசியவிட்டுள்ளது.

மனிதர்கள் வழியாக சேகரிக்கப்பட்ட உளவு தகவல் மற்றும் செல்போன், மெயில் பரிமாற்றம், செல்போனை ஒட்டுக்கேட்பது உள்ளிட்ட சிக்கனல்கள் மூலம் கண்டறியப்பட்ட உளவு தகவல்கள் வழியாக இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு வைத்துள்ளது. அதேபோல் கனடாவிற்கு நெருக்கமாக இருக்கும் Five Eyes intelligence குழுவை சேர்ந்த வேறு ஒரு நாடும் தனது உளவு தகவலை கனடாவிற்கு வழங்கி உள்ளதாக தகவல் கசியவிடப்பட்டுள்ளது. இது, மேலும் இந்திய உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவுக்குச் செல்லும் சீக்கியர்கள்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் 1991ஆம் ஆண்டுக்குப் பிறகே கனடாவுக்கு சீக்கியர்கள் குடிபெயர்வது அதிகரித்தது. 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கனடாவில் 7 லட்சத்து 71 ஆயிரம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். இது அந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 2.1 சதவீதமாகும். பிரிட்டிஷ் கொலம்பியா, ஆன்டாரியோ(ontario), அல்பெர்டா (alberta), மனிடோபா (manitoba), கியூபெக் (quebec) ஆகிய மாகாணங்களில் சீக்கியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். 1980, 90-களில் பஞ்சாப்பில் சீக்கிய கிளர்ச்சி வெடித்தது.

கனடா சீக்கியர்கள்
கனடா சீக்கியர்கள்ட்விட்டர்

இதன்பிறகே கனடாவுக்குச் செல்லும் சீக்கியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. தொடர்ந்து, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீக்கியர்கள் அதிகளவில் கனடாவுக்கு செல்லத் தொடங்கினர். ஆண்டுக்கு சராசரியாக 11 ஆயிரத்து 750 சீக்கியர்கள் புலம்பெயர்கின்றனர். கனடாவில் வசிக்கும் சீக்கியர்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. உயர்கல்வி மற்றும் வேலை தேடி சீக்கியர்கள் அதிகளவில் இந்தியாவில் இருந்து செல்வதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சீக்கியர்களை அடுத்து தமிழர்கள்!

சீக்கியர்கள் மட்டுமல்லாது, ஆண்டுதோறும் தமிழர்கள் அங்கு செல்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில், இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சென்ற 3.1 லட்சம் தமிழர்கள் அங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது. முன்பு, இலங்கைத் தமிழர்கள் மட்டுமே கனடாவுக்குச் சென்ற நிலையில், 2001க்குப் பிறகு தமிழகத்திலிருந்தும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக தமிழர்கள் அதிகளவில் செல்கின்றனர். உலக நாடுகளில் கனடாவில் மட்டுமே, இரண்டு ஆண்டுகளுக்குமேல் அங்கு தங்கிப் படித்து, வேலை பார்த்தால் அந்நாட்டின் நிரந்தர குடியுரிமையைப் பெறும் வாய்ப்புள்ளதால், இந்தியர்கள் பலரும் அங்கு செல்கின்றனர்.

இந்தியா கனடா
இந்தியா கனடாபுதிய தலைமுறை

கடந்த 2022ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள். சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் அங்கு உயர்கல்வி பயில்கின்றனர். அதிலும் தமிழர்கள் ஜனவரி மற்றும் மே மாதம் என ஆண்டுக்கு இருமுறை, மேற்படிப்புக்காக கனடா செல்கின்றனர். இப்படி, மொத்தத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரம் தமிழர்கள் அங்கு செல்வதாலும், அந்த நாட்டு குடிமக்களைவிட 3 - 4 மடங்கு கட்டணம் செலுத்தி படிப்பதால் கனடாவின் பொருளாதாரத்துக்கும் இந்தியா முதன்மையானக் காரணியாக விளங்குகிறது.

கனடா - இந்தியா வர்த்தக உறவு எப்படி?

சீக்கியர்கள் மற்றும் தமிழர்கள் அதிகளவில் கனடாவுக்குச் செல்வதால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவும் மேம்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கனடா, இந்தியாவின் 17வது பெரிய வெளிநாட்டு முதலீட்டு நாடாக திகழ்கிறது. கனடா தொழிலதிபர்கள் இந்திய பங்கு மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர். கனடா - இந்தியா ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான சரக்கு வர்த்தகம் 2022இல் கிட்டத்தட்ட 9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 57 சதவீதம் அதிகமாகும். கனடாவில் இருந்து உரங்கள், நிலக்கிரி, கல்கரி மற்றும் நிலக்கரி தூள் போன்றவை இறக்குமதி செய்யப்படுகிறது.

ஜஸ்டின் ட்ரூடோ, மோடி
ஜஸ்டின் ட்ரூடோ, மோடி

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் எவை?

அதேபோல், இந்தியாவில் இருந்து ஜவுளிகள், வாகன உதிரிப்பாகங்கள், விமான உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, கனடாவில் இருந்து இந்தியா, கனிமப் பொருட்கள் 36 சதவீதமும், காகிதப் பொருட்கள் 15 சதவீதமும், காய்கறிகள் 11 சதவீதமும், உலோகப் பொருட்கள் 10 சதவீதமும், ரசாயனப் பொருட்கள் 7 சதவீதமும், இயந்திரப் பொருட்கள் 6 சதவீதமும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதேபோல், இந்தியாவில் இருந்து கனடாவுக்கு ரசாயனப் பொருட்கள் 20 சதவீதமும், ஜவுளிப் பொருட்கள் 16 சதவீதமும், உலோகப் பொருட்கள் 14 சதவீதமும், இயந்திரப் பொருட்கள் 10 சதவீதமும், காய்கறிகள் 6 சதவீதமும், பிளாஸ்டிக் பொருட்கள் 5 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியா – கனடா துணைத் தூதரகத்தின் அதிகாரபூர்வ தகவலின்படி, இந்தியாவில் இருந்து கனடாவுக்கு ஆண்டுக்கு 370 கோடி ரூபாய் வர்த்தகமும், கனடாவில் இருந்து இந்தியாவுக்கு 277 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி வர்த்தகமும் நடக்கிறது.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் விரிசலால், எதிர்காலத்தில் அங்குச் செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி, பணிக்குச் செல்ல விரும்புவோரும் பாதிக்கப்படுவார்கள். தவிர, இருதரப்பிற்கு இடையேயான வர்த்தகமும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடப்பது என்ன? கனடா-இந்தியா உறவில் வெடித்த விரிசல் யாது? இதுகுறித்து முழுத் தகவல்களையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

கனடா - விவகாரத்தில் உலக நாடுகள் என்ன சொல்கின்றன என்பது குறித்துப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com