கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர்! யார் இந்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார்? உலக நாடுகள் என்ன சொல்கிறது?

கனடா - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்குக் காரணமான காலிஸ்தான் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் பற்றி இங்கு அறிவோம்.
கனடா, இந்தியா, ஹர்தீப்சிங் நிஜ்ஜார்
கனடா, இந்தியா, ஹர்தீப்சிங் நிஜ்ஜார்புதிய தலைமுறை

கனடா - இந்தியா உறவில் விரிசல்

காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடா - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் அந்தந்த நாட்டுத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்டன. இப்படி, இரு நாடுகளுக்கு இடையே மோதல் கடுமையாக வெடித்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை அந்நாடு வெளியிட்ட நிலையில், ’கனடாவை விட்டு வெளியேறுங்கள்’ என்று இந்திய மக்களுக்கு காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஜஸ்டின் ட்ரூடோ, மோடி
ஜஸ்டின் ட்ரூடோ, மோடி

வன்முறை அமைப்புகளின் புகலிடம் கனடா

இதையடுத்து, கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கும் மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது. மேலும், கனடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் அந்நாட்டு குடிமக்களுக்கு விசாவை, இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. இதற்கிடையே, காலிஸ்தான் ஆதரவாளரான சுக்தூல் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில்தான், ’பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், வன்முறை அமைப்புகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது’ என மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்திருந்தார்.

இருநாட்டு உறவு குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வெளிநாட்டு ஊடகங்கள் இருதரப்பு குறித்த மோதல் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், ’நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு, ‘கனடாவின் குற்றச்சாட்டுகள் பீரங்கி குண்டுகள் போன்றவை’ எனவும், ’நிஜ்ஜார் கொலைக்குப் பின்னால் இந்தியாவின் கை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு தர்மசங்கடான சூழ்நிலையாக இருக்கும்’ எனவும் குறிப்பிட்டுள்ளது.

’வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு, ’இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிப்பதாகவும், இந்தியா உண்மையாகவே மேற்கத்திய மண்ணில் அப்படி ஒரு செயலை செய்திருந்தால், அது மோதலை மேலும் அதிகரிக்கும்’ எனவும் தெரிவித்துள்ளது.

’சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ ஊடகமோ, ’நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா - கனடா இடையேயான நல்ல வணிக உறவுகள் தடம் புரளக்கூடும்’ என தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான 'டைம்' இதழும், ஜி-20 மாநாட்டின்போதே இந்தியா - கனடா உறவில் விரிசல் தொடங்கியதாகவும், இந்த சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பிளம்பர் டு பிரிவினைவாதி: ஹர்தீப்சிங் நிஜ்ஜார் யார்?

இப்படி, இருநாடுகளுக்கு இடையேயான உறவில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இதற்குக் காரணமான ஹர்தீப்சிங் நிஜ்ஜார் மீது இந்திய அரசால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து இங்கு அறிவோம். கனடாவில், கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப்சிங் நிஜ்ஜார், பஞ்சாப்பின் ஜலந்தரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், 1997ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரவி ஷர்மா என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பிளம்பராக வேலைபார்த்த இவர், மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்துவந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள சீக்கிய கோயிலின் தலைவராகவும், Sikhs for justice என்ற அமைப்பின் கனடா கிளைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

கொலை வழக்குகளில் ஈடுபட்ட காலிஸ்தான் தலைவர்!

காலிஸ்தான் சார்புக் குழுவான காலிஸ்தான் புலிப்படையின் தலைவர் என்று குற்றம்சாட்டப்பட்ட ஹர்தீப்சிங் நிஜ்ஜாரை, கைதுசெய்ய 2014இல் இந்திய அரசு பிடிவாரண்ட் பிறப்பித்தது. 1990களில் பஞ்சாப்பில் நடந்த தீவிரவாத நடவடிக்கைகளின் பின்னணியில் இவர் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் பாபா பனியாராவை பர்மிந்தர் காலாவில் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், 2015ஆம் ஆண்டில், மன்தீப் சிங் தலிவால் என்பருக்கு கனடாவில் பயிற்சி அளித்து பின்னர் பஞ்சாப்பிற்கு அனுப்பியதாகவும் அவர்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டில் மற்றொரு காலிஸ்தான் ஆதரவாளரான அர்ஷ் டல்லாவுடன் கைகோர்த்து கொலைச் செயல்களில் ஈடுபட்டதாகவும் 2021இல், அர்ச்சகர் ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாகவும் நிஜ்ஜார் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மறுப்பு தெரிவித்த ஹர்தீப்சிங் நிஜ்ஜார்

பாராகிளைடர் மூலம் வெடிமருந்துகளை இந்தியாவிற்கு கொண்டுசெல்லும் சதியில் ஈடுபட்டதாக, 2016இல் இன்டர்போல் காவல்துறையினரால் தேடப்படும் நபராகவும் அறிவிக்கப்பட்டார். இந்தியாவில் திட்டமிட்டு பல கொலைகளைச் செய்ததாக நிஜ்ஜார் மீது 2018இல் மத்திய அரசு குற்றம்சாட்டியது. வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து பஞ்சாப்பை சேர்ந்த உள்ளூர் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், இந்திய அதிகாரிகள் தன்னைக் குற்றவழக்குகளில் பொய்யாக சிக்கவைப்பதாக நிஜ்ஜார் மறுப்பு தெரிவித்தார்.

கனடாவில், கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்ட நிஜ்ஜார்!

இந்த நிலையில்தான், கனடாவின் வான்கூவர் நகருக்கு கிழக்கே, 30 கி.மீ தொலைவிலுள்ள சர்ரே என்ற ஊரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான கார் பார்க்கிங்கில் வைத்து, கடந்த ஜூன் மாதம் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். சீக்கியர்கள் கனடாவில் ஏறக்குறைய 110 ஆண்டுகளாக உள்ளனர். கனடா அரசியலில் பலம் ஆதிக்கம் மிக்க சிறுபான்மை சமூகமாக சீக்கிய சமூகம் விளங்கி வருகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை அந்நாட்டு அரசியலில் பெரும் விவாதமாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com