100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை: பிரதமர் மோடி பாராட்டு

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை: பிரதமர் மோடி பாராட்டு
100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை: பிரதமர் மோடி பாராட்டு
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான போரில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது இந்தியா.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு செலுத்தி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அவ்வப்போது சிறப்பு முகாம்கள், மெகா முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளது.
இந்தியாவில் ஒரு விநாடிக்கு மொத்தம் 700 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நாட்டில் இதுவரை 75% பேர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸையும் 31% பேர் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸையும் போட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தியதில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் 5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "இந்தியா வரலாறு படைத்திருக்கிறது. நாம் இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியைக் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள் இந்தியா; 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியருக்கு நன்றி. இந்த சாதனையை எட்ட உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், ''100 கோடி தடுப்பூசி என்ற சாதனை இலக்கை, 9 மாதங்களில் நாம் அடைந்திருக்கிறோம். இதுவரை, 75% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்து தடுப்பூசியை செலுத்த முயற்சிக்க வேண்டும். இதுவரை 30 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் 10 கோடி பேர், இரண்டாவது தவணைக்கான காலக்கெடு முடிந்தும் இன்னும் அதனை செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். இரண்டாவது டோஸை தவறவிட்டவர்களைக் கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com