"ஜேஎன் 1 வகை கொரோனா தொற்றுக்கு கூடுதல் டோஸ் தடுப்பூசி தேவையில்லை" - மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

ஒமிக்ரான் திரிபு வகை கொரோனா பரவி வரும் நிலையில், அதற்காக கூடுதல் தடுப்பூசி எதுவும் செலுத்த தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா
கொரோனாpt web

கொரோனா பரவிய நிலையில் அதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள இந்தியாவில் தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இரண்டு தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 88 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. கொரோனா மூன்றாம் அலை பரவியபோது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் பாதிப்புள்ளவர்கள், முன்கள பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அதன்பின்னர் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது.

இன்றைய நிலவரப்படி, நாடுமுழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் மொத்தம் 4054 பேர் என கண்டறியப்பட்டுள்ளனர். ஒருநாளில் 312 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா உள்ளது. நேற்று மட்டும் அம்மாநிலத்தில் மொத்தம் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் நாடுமுழுவதும் 315 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’வயதானவர்கள் முகமூடி அணிவது அவசியம்’

தி இந்து செய்தி நிறுவனத்திடம் புனேவை மையமாக கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ள அறிக்கையில், குளிர்காலம் அதிகரிப்பதால் கோவிட் ஜேஎன்1 வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்ப்பதாகவும் மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் வயதானவர்கள் முகமூடி அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என தெரிவித்துள்ளது.

’கூடுதல் டோஸ் வகை தடுப்பூசி தேவையில்லை’

இந்நிலையில் இந்தியா மட்டுமின்ற உலகம் முழுக்க ஒமிக்ரான் திரிபு வகை தொற்றான ஜேஎன் 1 வகை தொற்று பரவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தி உள்ளது. இந்தியா SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறுகையில், புதிய மாதிரியான ஜேஎன் 1 வகை தொற்றுக்கு கூடுதல் டோஸ் வகை தடுப்பூசி தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜேஎன் 1 வகை கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி ஏதும் செலுத்தத் தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த வகை கொரோனாவால் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே இருப்பதாகவும், உயிரிழப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், அதே சமயம் அச்சப்படத் தேவையில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் - தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர்

ஜேஎன் 1 வகை கொரோனா தமிழ்நாட்டில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான முடிவு இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அதற்கு சில தினங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் தற்போது கோவிட் தொற்றுடன் உள்ளவர்கள் 100 பேர் வரை இருக்கின்றனர். இவர்கள் யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நிலையில் கூட யாரும் இல்லை. எனவே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று இயக்குநர் செல்வ விநாயகம் புதிய தலைமுறைக்கு அளித்த தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com