இந்தியாவில் பெருகும் குற்றங்கள்.. ஒடிசாவில் பெண்களுக்கு எதிராக அதிகரிப்பு!
2023ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 7.2% அதிகரித்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான தேசியக் குற்ற ஆவணக் காப்பக தரவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதன்படி, 2023இல் பதிவான ஒட்டுமொத்த குற்றவழக்குகளின் எண்ணிக்கை 62,41,569. கடந்த 2022இல் பதிவான மொத்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 58,24,946. இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் 5.78% அதிகரித்தன. சிறப்பு மற்றும் உள்ளூர்ச் சட்டங்களின்கீழ் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் 9.5% அதிகரித்தன. குற்ற விகிதம் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 422.2 என்பதிலிருந்து 448.3ஆக அதிகரித்துள்ளது. மேலும், தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி பொருளாதாரக் குற்றங்கள் அதிகமாக நிகழும் இந்தியப் பெருநகரமாக மும்பை திகழ்கிறது.
2023ஆம் ஆண்டில் 6,476 பொருளாதாரக் குற்ற வழக்குகள் மும்பையில் பதிவாகியுள்ளன. ஆனால், 2022ஐ ஒப்பிடுகையில், 484 வழக்குகள் குறைந்துள்ளன. மும்பைக்கு அடுத்தபடியாக, ஹைதராபாத்தில் 5,728 பொருளாதாரக் குற்ற வழக்குகளும் ஜெய்ப்பூரில் 5,304 வழக்குகளும் பதிவாகின.
மகாராஷ்டிராவில் நிதிமோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. 2021இல் 15,550 நிதி மோசடிகள் நடந்தன. இது, 2022இல் 18,729 ஆகவும் 2023இல் 19,803 ஆகவும் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 9.6% அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது, இது 2022இல் 23,648 வழக்குகளிலிருந்து 2023இல் 25,914ஆக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு இருந்தபோதிலும், கைதுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2022இல் 9,240 ஆக இருந்த நிலையில், 2023இல் 7,563 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2023 ஆம் ஆண்டில் ஒடிசாவின் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை விகிதம் 6.9% ஆக மோசமாக உள்ளது. அதேபோல், NCRB அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டில் 670 வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 9,104 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.