வருமான வரி கட்டணுமா? கவலை வேண்டாம்.. அவகாசம் நீட்டிப்பு!
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்குமேல் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரும் தனிநபர் வருமானவரி செலுத்த வேண்டும். அதுபோல் வரி செலுத்தும் ஒவ்வொருவரும் வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதும் கட்டாயமாகும். அப்படி, கட்டாதவர்களுக்கு அபராதமோ, கூடுதல் வட்டியோ விதிக்கப்படும். இதற்காக வருமான வரித்துறை ஒரு கடைசித் தேதியை அறிவிக்கும். அதற்குள் கட்டாவிட்டால் அபராதத் தொகையையும் சேர்த்து கட்ட வேண்டிய சூழல் வரும். இந்த நிலையில், நடப்பாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கு வருமான வரித்துறை அவகாசம் அளித்துள்ளது.
இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31லிருந்து செப்டம்பர் 15 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி அறிக்கைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட விரிவான மாற்றங்களைக் கருத்தில் கொண்டும், 2025-26க்கான வருமான வரி பயன்பாடுகளின் அமைப்பு தயார்நிலை மற்றும் வெளியீட்டிற்குத் தேவையான நேரத்தைக் கருத்தில் கொண்டும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு சுமூகமான மற்றும் வசதியான தாக்கல் அனுபவத்தை எளிதாக்கும் வகையில், இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.