சாதிவாரி தரவுகளுடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு: முக்கியத்துவம் என்ன?
ஜி.எஸ்.பாலமுருகன்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் 2027ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து இங்கு அறிவோம். மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, நாட்டில் எத்தனை பேர் இருக்கிறோம்? அவர்கள் யார்? எங்கு வாழ்கிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? என்ன வேலை செய்கிறார்கள் என்பதை அறியும் முக்கியமான பணியாகும்.
கடைசி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011இல் நடந்தது. 2021இல் எடுக்க வேண்டிய கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு பணியுடன் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 மார்ச் 1இல் தொடங்குகிறது. பள்ளிகள், மருத்துவமனைகள், உணவு விநியோகம், போக்குவரத்து போன்றவற்றை திட்டமிட புதிய தரவுகள் தேவையாக உள்ளதால் கணக்கெடுப்பு அவசியமாகிறது. ஆனால், 2027 கணக்கெடுப்பு, தேர்தல்களையும் பாதிக்கக்கூடும் என்பதால் சிக்கலானதாக பார்க்கப்படுகிறது. ஒரு கணக்கெடுப்புக்குப் பிறகு, சில நேரங்களில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நாடாளுமன்றத்தில் கிடைக்கும் இடங்கள் எண்ணிக்கை மாற்றப்படலாம். இதையே, டீலிமிட்டேஷன் என்கிறார்கள்.
தெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சியை குறைக்க சிறப்பாக செயல்பட்டுள்ளன. வட மாநிலங்களான உத்தர பிரதேசம், பிஹார் போன்றவை வேகமாக வளர்ந்துள்ளன. ஆகவே இடங்கள் புதுப்பிக்கப்பட்டால் வட மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். இது வடக்கு தெற்கு என்ற விவாதத்தை கிளப்பக்கூடும் என்று கூறுகிறார்கள் அரசியல் நிபுணர்கள். எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் எப்போது வரும்? 2029 தேர்தலுக்கு முன் நாடாளுமன்ற இடங்களை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதா என்று மத்திய அரசு தெரிவித்தால் தெளிவுகள் கிடைக்கும் என்கிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையிலும் கணக்கெடுப்பு உதவுகிறது. நகரங்களில் எத்தனை பேர் வாழ்கிறார்கள்?
கிராமங்களில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எத்தனை குடும்பங்கள் இலவச உணவு போன்ற உதவிகளை தேடுகிறார்கள்? மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு எவ்வாறு நகர்கிறார்கள்? வாழ்க்கை முறை மற்றும் செலவுகள் எப்படி மாறிக்கொண்டு இருக்கின்றன? போன்றவற்றுக்கு கிடைக்கும் பதில்கள் மூலம் அரசு நிர்வாகம் சிறந்த முடிவுகளை எடுக்கும் என பார்க்கப்படுகிறது. சாதி தரவுகளும் சேகரிக்கப்பட உள்ளன. ஆனால், அது எப்படி பயன்படுத்தப்படும் என்பது பற்றி இன்னும் மத்திய அரசு தெளிவுப்படுத்தவில்லை. முன்பு பிஹார், கர்நாடகா மாநிலங்களில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்புகள் நிறைய விவாதங்களை ஏற்படுத்தின. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கு தேவையானது. ஆனால் சரியாக கையாளப்படவில்லை என்றால் அரசியல் சச்சரவுகளை ஏற்படுத்தக்கூடும்.