2025 | தீவிர வானிலை நிகழ்வுகள்.. 2,700 பேர் உயிரிழப்பு.. உ.பியில் அதிகம்!
கடந்தாண்டில் மட்டும் தீவிர வானிலை நிகழ்வுகளால், நாடு முழுவதும் சுமார் 2,700 பேர் உயிரிழந்திருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவலாக மழையை எதிர்கொண்டது. இதில், வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இன்னும் சில மாநிலங்களில் தொடர் கனமழையும் பெய்தது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில், கடந்தாண்டில் மட்டும் தீவிர வானிலை நிகழ்வுகளால், நாடு முழுவதும் சுமார் 2,700 பேர் உயிரிழந்திருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இடி, மின்னல், கனமழை, மேகவெடிப்புகள், வெள்ளம், வெப்ப அலைகள், குளிர் அலைகள், நிலச்சரிவுகள் ஆகியவற்றால் மட்டும், கடந்தாண்டு நாடு முழுவதும் 2,760 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1,370 பேர், கனமழை, வெள்ளம்,மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளால் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதில் உத்தரப்பிரதேசம் (சுமார் 410) மற்றும் மத்தியப் பிரதேசம் (சுமார் 350) ஆகியவை அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளன. இதில் உபியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் மட்டும் 79 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 350 பேர் உயிரிழந்தநிலையில், அதில் 150 பேர் கனமழை, மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளால் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் கனமழை, வெள்ளம், மின்னல், வெப்பஅலை ஆகியவற்றால், 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில், (கிட்டத்தட்ட 50) பெரும்பாலான இறப்புகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டவை ஆகும். தவிர, நாடு முழுவதும் மழைப்பொழிவும் இயல்பை விட அதிகமாகவே இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 1971–2020ஆம் ஆண்டிற்கான நீண்டகால சராசரி (LPA)மழைப்பொழிவில் இந்தியா 110% ஐப் பெற்றது.
1901க்குப் பிறகு மூன்றாவது அதிகபட்ச மழைப்பொழிவாக பருவமழைக்கு முந்தைய மழைப்பொழிவு தரவரிசையில் இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த அறிக்கை' என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, இந்தியா இதுவரை பதிவு செய்யப்படாத வெப்பமான ஆண்டுகளில் ஒன்றை அனுபவித்ததையும் எடுத்துக்காட்டுகிறது. அகில இந்திய ஆண்டு சராசரி நிலப்பரப்பு காற்றின் வெப்பநிலை 1991–2020 நீண்டகால சராசரியைவிட 0.28 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது, இது 1901இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2025ஐ 8ஆவது வெப்பமான ஆண்டாக மாற்றியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

