குற்றவாளியை காப்பாற்ற நினைத்தால் தண்டனை.. பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

குற்றவாளியை காப்பாற்ற நினைத்தால் தண்டனை.. பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
குற்றவாளியை காப்பாற்ற நினைத்தால் தண்டனை.. பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

பாலியல் வழக்கில் குற்றவாளியை காப்பாற்றும் நோக்கில் திடீரென பிறழ் சாட்சியம் அளித்தால், பாதிக்கப்பட்ட பெண்ணும் தண்டிக்கப்பட வேண்டியவர்தான் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

குஜராத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கு தொடங்கியபோது, குற்றவாளியை அந்த சிறுமி தெளிவாக அடையாளம் காட்டினார். பின்னர் ஆறு மாதங்களுக்குப் பின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிறழ் சாட்சியம் அளித்த அந்த சிறுமி கீழே விழுந்ததால், தனது உடலில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து விசாரணை நீதிமன்றம் குற்றவாளியை விடுவிக்க உத்தரவிட்டது. இதையடுத்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், மருத்துவ அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை குற்றவாளி என தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து குற்றவாளி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஆராய்ந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா மற்றும் ஜோசப் அடங்கிய அமர்வு, பாதிக்கப்பட்ட பெண் பிறழ் சாட்சியம் அளித்திருந்தபோதிலும், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன் சட்டத்தை வெறும் வாய் வார்த்தையாக நீதிமன்றம் கடைபிடிக்காது என தெரிவித்த நீதிபதிகள், பிறழ் சாட்சியம் அளித்த குற்றத்துக்காக பாதிக்கப்பட்ட பெண்ணும் தண்டிக்கப்பட வேண்டியவர் தான் என தெரிவித்தனர். அதே சமயம் குற்றம் நடந்து 14 ஆண்டுகள் ஆனதாலும், அந்தப் பெண்ணுக்கு திருமணமானதால், அவரை மன்னித்து விடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com