கார்கில் டு OP சிந்தூர் வரை.. 60 ஆண்டுகளாக பணியாற்றிய மிக்-21 போர் விமானங்களுக்கு ஓய்வு!
இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளாக பணியாற்றி வந்த மிக்-21 போர் விமானங்களுக்கு நிரந்தர ஓய்வு அளிக்கப்பட உள்ளன. இவ்வகை விமானங்களுக்கு விடை கொடுக்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் சண்டிகரில் நடைபெற உள்ளது.
சீனா, பாகிஸ்தானுடனான போரில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மிக் விமானங்கள் அதன் பிறகும் இந்தியாவின் கார்கில் போர், பாலகோட் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்களித்தன. சோவியத் யூனியன் காலத்து மிக் ரக விமானங்கள் பழைய தொழில்நுட்பம் கொண்டவை என்பதாலும் அதிகளவு விபத்துகளுக்கு உள்ளாவதாலும் அவற்றை படையிலிருந்து நீக்க அரசு முடிவு செய்தள்ளது. தற்போதைய நிலையில் 29 மிக் விமானங்கள் மட்டுமே இந்திய விமானப்படை வசம் உள்ளன. மிக் 21 விமானங்களை நீக்க ஏற்கனவே முடிவெடுத்துவிட்டாலும் அதற்கு பதிலாக புதிய விமானங்கள் வருவது தாமதமானதால் அவற்றை கைவிடுவதை அரசு நீடித்துக்கொண்டே வந்தது. மிக் 21க்கு பதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ், பிரான்ஸ் தயாரிப்பான ரஃபால் போன்றவை இந்திய விமானப் படையில் இணைய உள்ளன.