200க்கும் மேற்பட்டவர்களை பலிவாங்கிய மிக்-21 விமானம்! இது 'பறக்கும் சவப்பெட்டி'!
இந்திய விமானியான அபிநந்தன் மிக்21 வகை போர் விமானத்தை ஓட்டிச்சென்று பாகிஸ்தானிடம் சிக்கினார். அவரை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக இம்ரான்கான் அறிவித்தார். அதன்படி நேற்று இரவு அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் ஓட்டிச்சென்ற விமானமான மிக்21 குறித்தும், அதன் வரலாறும் குறித்தும் 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரஷ்யா விடம் இருந்து 1966-ம் ஆண்டில் மிக்-21 ரக போர் விமானங்கள் வாங்கப்பட்டது. வாங்கப்பட்ட காலக்கட்டத்தில் தலைசிறந்த விமானமாக கருதப்பட்ட மிக்21, காலத்திற்கு ஏற்ப மாறவில்லை. பழமையான தொழில்நுட்பம் காரணமாக மிக்21 வகை போர் விமானம் அடிக்கடி விபத்தை சந்தித்துள்ளன. இந்த விமானம் விபத்துக்குள்ளானது மூலம் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருப்பதாகவும், அதனால் இந்த வகை விமானத்தை 'பறக்கும் சவப்பெட்டி' என்று ராணுவத்தில் அழைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து பேசியுள்ள இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற ஜூனியர் வாரண்ட் அதிகாரியான எஸ்.வரதராஜன், ''மிக்21 வகை போர் விமானம், பயிற்சியின் போது சிலசமயம் விபத்துக்குள்ளாகி விடுகிறது. இதன் காரணமாக அந்த விமானத்தை ‘பறக்கும் சவப்பெட்டி’ எனவும், ‘விதவை தயாரிப்பாளர்’ எனவும் பட்டப்பெயரிட்டு ராணுவத்தின் அழைக்கின்றனர்.
2012ம் ஆண்டு மிக்-21 குறித்த ஒரு கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ஏ.கே.அந்தோணி மாநிலங்களவையில் பதிலளித்தார். அதில் ஏப்ரல் 19, 2012 வரையில் மிக்-21 ரக போர்விமானத்தால் 171 விமானிகளும், 39 பொதுமக்களும் பலியானதாகக் கூறினார்.'' என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய ஓய்வுபெற்ற ராணுவ பீரங்கி படையின் பிரிகேடியர் வி.ஏ.எம்.உசைன், ''சிறிய நாடுகளின் பயன்பாட்டில் மட்டுமே மிக்-21 விமானம் பயன்பாட்டில் உள்ளது. இதுபோன்ற குறைகளை மத்திய அரசு உடனடியாகத் தீர்ப்பது அவசியம். அப்போதுதான் நம்நாடு உண்மையான பாதுகாப்பு பெறும்'' எனத் தெரிவித்தார்.
மிக்-21 ரக விமானங்களின் கோளாறுகளை கார்கில் போருக்கு பின் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு கருத்தில் கொண்டதாகவும் அதற்கு ஈடாக வேறுவகை போர் விமானங்கள் வாங்க எடுக்கப்பட்ட முடிவு 19 ஆண்டுகளாக நிறைவேறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் ஒரு சிறந்த வகை விமானமாகக் கருதப்பட்டதுதான் ஊழல் புகாரில் சிக்கியுள்ள ரஃபேல் போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.