Ahmedabad Plane Crash | மறைந்த மனைவியின் இறுதி ஆசை.. அஸ்தியைக் கரைக்க இந்தியா வந்த கணவர்..!
குஜராத் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளாகி நாட்டையே நடுங்கச் செய்துள்ளது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில், விசாரணைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக கணவரைச் சந்திக்க லண்டன் சென்ற பெண், குஜராத்தின் முன்னாள் முதல்வர் என பயணிகள் ஒவ்வொருவர் குறித்தும் வரும் தகவல்கள் அதிரவைக்கின்றன. இந்நிலையில் மறைந்த தனது மனைவியின் அஸ்தியைக் கரைப்பதற்காக இந்தியா வந்த நபரும் திரும்பிச் செல்லும்போது விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அர்ஜூன் பட்டோலியா (38) குஜராத்திலுள்ள அம்ரேலி மாவட்டத்தினைச் சேர்ந்தவர். இவரது மனைவியின் பெயர் பாரதிபென். இத்தம்பதிக்கு நான்கு மற்றும் எட்டு வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த மே மாதம் 26ஆம் தேதி பாரதிபென் உயிரிழந்துவிட்டார். தனது அஸ்தி சொந்த கிராமத்தில் கரைக்கப்பட வேண்டுமென்பது பாரதிபென்னின் கடைசி ஆசையாக இருந்துள்ளது.
மீண்டும் லண்டன் செல்கையில் விபத்து
இதன்காரணமாக அர்ஜூன் பட்டோலியா, மனைவியின் அஸ்தியை எடுத்துக்கொண்டு அம்ரேலியிலுள்ள தனது சொந்த கிராமத்திற்குச் சென்றுள்ளார். தனது குடும்பத்தினருடன் சேர்ந்து உள்ளூரிலுள்ள ஒரு நதியில் மனைவியின் அஸ்தியைக் கரைத்து சடங்குகளைச் செய்துள்ளார். சடங்குகளை முடித்தபின் மீண்டும் லண்டன் திரும்புவதற்காக அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவர், ஏர் இந்தியா AI-171 ட்ரீம்லைனர் விமானத்தில் பயணித்துள்ளார். இந்நிலையில்தான் பிற்பகல் 1:40 மணியளவில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்திற்குள்ளாக விபத்திற்குள்ளானது. அர்ஜூன் பட்டோலியாவுடன் விமானத்தில் பயணித்த 240 பேரும் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
விமான விபத்து குறித்தான புலனாய்வுப் பணியகம் விபத்து தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.