“கணவர், பிரதமரின் பெயர் சொன்னால், இரவு உணவு இல்லை என சொல்லுங்கள்” - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

“பிரதமர் மோடியின் பெயரை உங்கள் கணவர் சொன்னால், அவரிடம் இரவு உணவு இல்லை என சொல்லுங்கள்” என டெல்லி பெண்களுடன் நடந்த மாதம் தோறும் ரூ.1000 திட்டம் குறித்த உரையாடல் நிகழ்வில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்pt web

டெல்லி அரசு தனது 2024 -2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் “முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்குவதாக அறிவித்தது. இந்த திட்டத்திற்காக ஆம் ஆத்மி அரசு ரூ.2000 கோடியை ஒதுக்கியுள்ளது என்று டெல்லி நிதியமைச்சர் அதிஷி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது தெரிவித்திருந்தார். இதனை அடுத்து முதலமைச்சர் கெஜ்ரிவால் திட்டம் குறித்து பெண்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வு, Mahila Samman Samaroh (பெண்கள் கௌரவிப்பு விழா) எனும் பெயரில் டெல்லியில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில், பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவை ஆதரிக்கும் மற்ற பெண்கள் குறித்து பேசுகையில், “உங்கள் அண்ணன் கெஜ்ரிவால் மட்டும் தான் உங்களுக்கு துணை நிற்பார்” என கூறினார். மேலும், நிகழ்வில் கூடியிருந்த பெண்களிடம் அவர் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கும் ஆண்களை ஊக்குவிப்பது என்பது குடும்பத்தில் உள்ள பெண்களின் பொறுப்பு. பல ஆண்கள் பிரதமர் மோடியின் பெயரை உச்சரிக்கிறார்கள். அதை உங்களால் மட்டுமே சரிசெய்ய முடியும். பிரதமர் மோடியின் பெயரை உங்கள் கணவர் கூறினால், அவரிடம் இரவு உணவு கொடுக்க மாட்டேன் என சொல்லுங்கள்.

கெஜ்ரிவால் தான் உங்களுக்கு மின்சாரத்தை இலவசமாக கொடுக்கிறார். இலவச பேருந்து பயணத்தை கொடுக்கிறார். இப்போது பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 கொடுக்கிறார். பாஜக என்ன செய்தது? பின் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்? என அவர்களிடம் (கணவர்களிடம்) சொல்லுங்கள். பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் எடுத்துக்கூறி, ஆம் ஆத்மிக்கான ஆதரவை உறுதி செய்ய வேண்டும்.

பெண்களுக்கு ரூ.1000 கொடுத்து கெஜ்ரிவால் பணத்தை வீணடிப்பதாக அவர்கள் (பாஜக) சொல்கிறார்கள். அதிகமானோரின் கடன்களை தள்ளுபடி செய்தபோது அந்த பணம் வீணாகவில்லையா?

பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்ற பெயரில் மோசடி நடந்து வருகிறது. இதுவரை கட்சியில் இருந்த ஒரு பெண்ணை மட்டும் பாராட்டி பெண்கள் அதிகாரத்திற்கு வந்திவிட்டதாக கூறி வந்தனர். பெண்களுக்கு பதவிகள் வேண்டாம், பெரிய பொறுப்புகள் எல்லாம் வேண்டாம் என நான் சொல்லவில்லை. ஆனால் இரண்டு அல்லது நான்கு பெண்கள் மட்டுமே இதனால் பயனடைகிறார்கள். மற்ற பெண்களுக்கு என்ன கிடைக்கும்? ஆனால் தற்போது, ஒவ்வொரு பெண்ணின் பர்ஸிலும் நான் ரூ. 1000 வைப்பேன். காலியான பணப்பை அதிகாரத்தைக் கொடுக்காது” என தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவாலின் பேச்சுக்கு பாஜக தரப்பில் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன. அரசியல் அடிப்படையில் இரவு உணவை கொடுக்காமல் இருப்பதற்கான ஆலோசனையானது, சமூகப்பிளவுகளை ஆழமாக்கும் திறன் என்றும், குடும்பத்திற்குள் சகிப்புத் தன்மை இல்லா நிலையை ஊக்குவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com