”யூடியூப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்” - தங்கம் கடத்திய வழக்கில் நடிகை கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது வீட்டில் மேலும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளானது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் நாளுக்குநாள் புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தவிர, மாநில அரசியலிலும் ரன்யா ராவின் தங்கக் கடத்தல் விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது.
அதேநேரத்தில், தனக்கு ஜாமீன் கோரி பெங்களுரு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ``ஒரு பெண்ணாக இருந்தும் என்னைத் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ விடமாட்டோம் என்கிறார்கள். வார்த்தைகளால் என்னைக் கொடுமைப்படுத்தி அச்சுறுத்துகிறார்கள். எமோஷனலாக நான் உடைந்துவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், துபாயில் இருந்து தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி கடத்தி வந்தது என்பது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளிடம் ரன்யா ராவ் விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், ”வெளிநாட்டு எண்ணிலிருந்து வந்த போனில் துபாய் விமான நிலையத்தின் முனையம் 3ல் உள்ள கேட் Aக்குச் செல்லுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது. துபாய் விமான நிலையத்தில் தங்கத்தை சேகரித்து பெங்களூருவில் டெலிவரி செய்யுமாறு என்னிடம் கூறப்பட்டது. என்னை தொலைபேசியில் அழைத்தது யார் என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. தங்கக் கட்டிகளை அவர், ஹோட்டல் ஒன்றில் தன்னிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு அவர் உடனடியாக வெளியேறினார். நான் அவரை மீண்டும் சந்திக்கவில்லை. அந்த நபர் சுமார் 6 அடி உயரமும், வெள்ளை நிறமும் கொண்டவர்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், “முன்னதாக, தங்கத்தைக் கடத்துவது எப்படி என்பதை யூடியூப்பைப் பார்த்து கற்றுக் கொண்டேன். விமான நிலையத்தில் கத்தரிக்கோல் மற்றும் பேண்டேஜ்கள் கிடைக்காது என்பதால் வெளியில் இருந்து வாங்கிச் சென்றேன். பின்னர், விமான நிலையத்தில் உள்ள ஒரு கழிப்பறையில் தங்கக் கட்டிகளை தனது உடலின் இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் பேண்டேஜ்களால் ஒட்டிக் கொண்டேன். சிலவற்றை கைப்பையிலும், காலணிகளும் போட்டு மறைத்து வைத்தேன்” என அதிகாரிகளிடம் ரன்யா ராவ் விளக்கம் அளித்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி, விமான நிலைய நெறிமுறை அதிகாரி பசப்பா பில்லூரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காவல் உயர் அதிகாரியின் மகள் என்பதால் காவல்துறை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், விமான நிலையங்களில் உயா்காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சோதனை விலக்கு சலுகைகள் நடிகை ரன்யா ராவுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு முறையும் ரன்யா ராவ் வருகை தரும் விமானம் குறித்து தகவல் கிடைத்தவுடன் அவரின் பேக்குகளை விரைவாக எடுக்க ஏற்பாடு செய்து, விஐபி வழியில் அனுப்பியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.