\
How Gandhi Assassinations Changed PM Security in India
இந்திரா காந்தி - ராஜீவ் காந்திReuters

இந்திரா, ராஜீவ் படுகொ*கள்: பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஓர் பார்வை!!

இந்தியப் பிரதமர்களின் பாதுகாப்பு வரலாற்றில், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகள் மிகப் பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தின.
Published on: 

ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் பிரதமர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலைகள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

இந்தியப் பிரதமர்களின் பாதுகாப்பு வரலாற்றில், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகள் மிகப் பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தின. 1984ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, இந்தியப் பிரதமருக்கெனத் தனியாக ஒரு பாதுகாப்புப் படை கிடையாது. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவே பிரதமர் இல்லத்தையும் அலுவலகத்தையும் பாதுகாத்து வந்தது. 1981இல் பிரதமரின் பயணப் பாதுகாப்புக்காக உளவுத் துறையின் கீழ் 150 வீரர்களைக் கொண்ட சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. ஆனால், 1984 அக்டோபர் 31 அன்று, தன் சொந்தப் பாதுகாவலர்களாலேயே பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பாதுகாப்பு அமைப்பிலிருந்த மிகப் பெரிய ஓட்டையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

பிரதமர் பாதுகாப்பு (கோப்புபடம்)
பிரதமர் பாதுகாப்பு (கோப்புபடம்)PTI

இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து, 1985இல் அமைக்கப்பட்ட பீர்பால் நாத் கமிட்டியின் பரிந்துரைப்படி, 1985 மார்ச் 30 அன்று 819 பணியிடங்களுடன் 'சிறப்புப் பாதுகாப்புக் குழு' எனப்படும் எஸ்.பி.ஜி. (SPG) படை உருவாக்கப்பட்டது. பிரதமர் பாதுகாப்புக்கான 'ப்ளூ புக்' விதிகள் திருத்தப்பட்டு, மாநில காவல்துறை மற்றும் எஸ்.பி.ஜி. ஆகிய இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை நடைமுறைக்கு வந்தது. 1988இல் ராஜீவ் காந்தி அரசால் எஸ்.பி.ஜி. சட்டம் இயற்றப்பட்டு இப்படைக்குச் சட்டபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், 1989இல் வி.பி. சிங் தலைமையிலான அரசின் காலகட்டத்தில் ராஜீவ் காந்திக்கு எஸ்.பி. ஜி. பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.

"1988 சட்டப்படி பதவியில் இருக்கும் பிரதமருக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு" என வி.பி. சிங் விளக்கமளித்தார். இதற்குப் பதிலாக ராஜீவ் காந்திக்கு இசட்-பிளஸ் (Z+) பாதுகாப்பும், 6 முன்னாள் எஸ்.பி.ஜி. வீரர்களும் மட்டுமே வழங்கப்பட்டனர். விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளிடமிருந்து கடும் அச்சுறுத்தல் இருந்தும், சட்டத்தில் திருத்தம் செய்யாமல் பாதுகாப்பைக் குறைத்தது தவறு என வர்மா மற்றும் ஜெயின் ஆணையங்கள் விமர்சித்தன.

Reuters

1991 மே 21 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், எஸ்.பி.ஜி. போன்ற இறுக்கமான பாதுகாப்பு வளையம் இல்லாததால், மனித வெடிகுண்டான தனு, சோதனையின்றி ராஜீவ் காந்திக்கு மிக அருகில் சென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடிந்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலைகளுக்குப் பிறகே, 1991இல் எஸ்.பி.ஜி. சட்டம் திருத்தப்பட்டு, முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் 5 ஆண்டுகளுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்கும் விதி கொண்டுவரப்பட்டது. பின்னர் 1994இல் இது 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

How Gandhi Assassinations Changed PM Security in India
”டிச.16-க்குள் வங்கதேசத்தைக் கைப்பற்றுவோம்” - பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!!