உடல்பருமனும் தொற்றுநோயும்.. ஆராய்ச்சியில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!
வயது, உயரம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு உடல் கட்டுக்கோப்பாக இல்லாமல் பருமனாக இருக்கும்போது, பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. கூடவே, உடல் பருமன் கொண்டோருக்குத் தொற்றுநோய் ஏற்பட்டால் அதில் இருந்து மீள்வது கடினம் என்பதும் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
உடல்நலனுக்கு முக்கிய எதிரி தொற்றுநோய்கள்
உடல் நலனுக்கு முக்கிய எதிரி தொற்றுநோய்கள்தான். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட 2021ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக நேரிடும் மரணமே, இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 10 ஆவது இடத்தில் காசநோய் இருக்கிறது. சாதாரண உடல்வாகு கொண்டோருக்கே தொற்றுநோய்கள் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், உடல் பருமனால் பாதிக்கப்படுவோர் எளிதாக தொற்றுநோய்க்கு ஆளாகும் நபர்களாக உள்ளனர். அண்மையில் லான்செட் இதழ் நடத்திய ஆய்வில் தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவோரில் 10 சதவீதத்துக்கும் அதிகமானோர் உடல் பருமன் கொண்டோராக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
பிரிட்டன், பின்லாந்து ஆகிய நாடுகளில் 14 ஆண்டுகளுக்கும் மேலாக 18 வயதுக்கு மேற்பட்ட உடல் பருமன் கொண்ட 5 லட்சத்து 50 ஆயிரம் பேரின் மருத்துவ தரவுகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 70 சதவீதம் பேர் ஏதேனும் ஒரு தொற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவராக அல்லது உயிரிழப்பவராக இருக்கிறார் என்பதும் ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவலாகும்.
இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் மிகா கிவிமாக்கி, தொற்றுநோய்களுக்கு எதிராக உடல் போராடும் சக்தியை உடல் பருமன் பலவீனமாக்குவதாக கூறினார். இதனால் உடல் பருமனாக உள்ளவர்கள் மிகவும் தீவிரமான நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றார். ஆகவே, தொற்றுநோய் ஆபத்தில் இருந்து விடுபட, முதலில் உடல் பருமனை குறைக்க வேண்டியது அவசியம்.

