விபத்திற்குள்ளான விமானம்
விபத்திற்குள்ளான விமானம்pt web

நாட்டை உலுக்கிய விபத்து| ”யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” கடைசிநேர MAYDAY call-ம் வீணானதா?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
Published on

விபத்திற்குள்ளான விமானம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்விக் நகரை நோக்கிப் புறப்பட்ட நிலையில் சில நொடிகளில் விபத்திற்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகைகள் கிளம்பிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை..”

அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், விமானத்தில் பயணித்தவர்களில் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அகமதாபாத் காவல்துறை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்குள்ளான விமானம்
விபத்திற்குள்ளான விமானம்pt web

அகமதாபாத்தில் மீண்டும் விமான சேவை!

விமானம் விபத்திற்குள்ளானதை அடுத்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி!

விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பட்டியலில் ரூபானி விஜய் ராம்னிக்லால் என்ற பெயர் உள்ளது. இவர் குஜராத்தின் 16 ஆவது முதலமைச்சராக 2016 முதல் 2021 வரை செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது... குஜராத் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் யக்னேஷ் தேவ், ரூபானி விமானத்தில் பயணிக்கத் திட்டமிட்டிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது தற்போதைய நிலை இன்னும் தெரியவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். விமான அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், பயணிகளின் பட்டியலில் 12 ஆவது பயணியாக ரூபானியின் பெயர் பெயரிடப்பட்டுள்ளது. ரூபானிக்கு நெருக்கமான வட்டாரங்கள் லண்டனில் உள்ள அவரது மனைவி அஞ்சலி ரூபானியை அழைத்து வருவதற்காக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

Mayday call என்றால் என்ன?

பரபரப்பான தகவலாக விபத்திற்குள்ளான விமானத்தின் விமானி அகமதாபாத்திலுள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு மேடே அழைப்பு விடுத்துள்ளார். Mayday அழைப்பு என்பது முதன்மையாக விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் சூழல்களில் பயன்படுத்தப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அவசரகால பேரிடர் சமிக்ஞையாகும். இது விமானம் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்பதைக் குறிப்பதாகும். ஆனால், விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அழைப்புகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை. இந்த விமானம் கேப்டன் சுமித் சபர்வால் என்பரால் இயக்கப்பட்டது. இவர் 8,200 மணிநேரம் விமானத்தினை இயக்கியுள்ள அனுபவமுள்ளவர். துணை விமானியாக இருந்த கிளைவ் குந்தருக்கு 1100 மணி நேரம் விமானத்தினை இயக்கிய அனுபவம் இருக்கிறது.

விபத்திற்குள்ளான விமானம்
விபத்திற்குள்ளான விமானம்pt web

பறவைகள் மோதியதால் விபத்தா?

விமான நிபுணர்கள் விபத்து குறித்து கூறுகையில், “முதற்கட்ட பார்வையில் பல பறவைகள் மோதியதால் இரு இன்ஜின்களும் மின்சாரத்தை இழந்திருக்கலாம். take-off மிகச்சரியாக இருந்தது. ஆனால், கியரை மாற்றுவதற்கு முன்பே விமானம் கீழிறங்கத் தொடங்கியது. இது இயந்திரம் தனது சக்தியை இழந்தாலோ அல்லது விமானம் மேலேறுவதை நிறுத்தினாலோ மட்டுமே நிகழும்” எனத் தெரிவிக்கின்றனர்.

விமான புலனாய்வுப் பிரிவு விசாரணை

விபத்திற்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் என்ற விமானம் நீண்ட பயணங்களுக்கு ஏற்ற அதிகம் விற்பனையான விமானங்களில் ஒன்று. விமான கண்காணிப்பு தளமான FlightRadar24 இன் படி, விபத்திற்குள்ளான விமானம் 2014 இல் ஏர் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. விபத்து நிகழ்ந்தது தொடர்பாக FlightRadar எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, “விமானம் அதிகபட்சமாக 625 அடி உயரத்தை (விமான நிலையத்தின் உயரம் சுமார் 200 அடி) எட்டியபின், நிமிடத்திற்கு -475 அடி செங்குத்து வேகத்தில் கீழே இறங்கத் தொடங்கியது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”என் இதயம் நொறுங்கியது” - பிரதமர் மோடி

விமான விபத்து தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விமான விபத்து நம்மை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் நொறுங்கியது. களத்தில் இருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) மூன்று குழுக்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த விமான விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு பிரிவு (Aircraft Accident Investigation Bureau) விசாரிக்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். AAIB இயக்குநர் ஜெனரல் மற்றும் நிறுவனத்தின் புலனாய்வு இயக்குநர் உள்ளிட்டோர் அகமதாபாத்திற்குச் செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து தொடர்பாக போயிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தின் ஆரம்பக்கட்ட சம்பவங்கள் குறித்து தெரியும் என்றும் கூடுதல் தகவல்களைச் சேகரிக்க தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com