
வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் மேதே (Meiteis) சமூக மக்களுக்கும் குக்கி (Kuki) சமூக மக்களுக்கும் இடையேயான மோதலால் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ள சூழலில் அம்மாநிலத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார். பல்வேறு நகரங்களில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள மக்களையும் சந்தித்தார். தொடர்ந்து மேதே, குக்கி சமூக பிரதிநிதிகளை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், பின்னர் பாதுகாப்புப் படையினருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாநில அமைதியை குலைக்கும் எந்தவொறு செயலுக்கும் அனுமதி அளிக்காமல், அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவும், காவல்நிலையம், கிடங்கில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை மீட்கவும் துரிதமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இந்த சூழலில் மணிப்பூரில் அமித் ஷா இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கை, தற்போதைய சூழல் குறித்து அவர் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூரில் அமித் ஷா முகாமிட்டிருந்த போதும் கூட வன்முறை ஓயவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
மேதே - குக்கி மக்களுக்கிடையே என்ன பிரச்சினை?
மணிப்பூரின் மக்கள் தொகை சுமார் 28 லட்சம். இதில் மேதே சமூகத்தினர் 53 சதவிகிதம் உள்ளனர். இந்த மக்கள் முக்கியமாக இம்ஃபால் பள்ளத்தாக்கில் குடியேறியுள்ளனர். மேதே சமூகத்திற்கு பட்டியலில் பழங்குடியினரின் அந்தஸ்து அளிக்கப்படுவதை, பல பழங்குடியின சமூகங்களை உள்ளடக்கிய குக்கி இனக்குழு எதிர்த்து வருகிறது.
மணிப்பூரில் பொதுவாக மலைப்பகுதிகளில் வாழும் பல்வேறு குக்கி பழங்குடியினர் தற்போது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 30 சதவிகிதமாக உள்ளனர். மேதே சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கினால் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தங்கள் சேர்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்று குக்கி மக்கள் கருதுகின்றனர். பெரும்பாலான இடஒதுக்கீட்டை மேதே மக்கள் எடுத்துக்கொண்டு விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
மணிப்பூரில் பழங்குடி பாதுகாப்பு சட்டம் இருப்பதால் மேதே பிரிவினர் குக்கி பகுதி வசிக்கும் வனப்பகுதியில் நிலங்களை எல்லாம் வாங்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே பாஜக அரசு மேதே பிரிவினருக்கு எஸ்டி இடஒதுக்கீடு கொடுக்க மும்முரமாக இருக்கிறது. பெரும்பான்மை இவர்கள்தான். இவர்களின் ஆதரவில்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும் முடியும் என்பதால் பாஜக அரசு இவர்களுக்கு பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு கொடுக்க நினைக்கிறது. ஆனால் இதை குக்கி பழங்குடியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு...
இதனிடையே மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங், ''கடந்த 2001-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நாகாலாந்தில் துரதிருஷ்டவசமாக இரண்டு மிகப் பெரிய கலவரங்கள் ஏற்பட்டன. அப்போது, உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, நாகா குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது எட்டப்பட்ட தீர்வு என்பது நாகாலாந்துக்கு மட்டுமே என்பதாக இருந்தது. ஆனால், அண்டை மாநிலமான மணிப்பூர் மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு அப்போது முக்கியத்துவம் அளிக்கவில்லை. அது, மணிப்பூர் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், மணிப்பூரிலும் கலவரம் ஏற்பட்டது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரில் மீண்டும் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன. மணிப்பூரில் நிலவும் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்'' எனத் தெரிவித்தார்.