
மேற்கு வங்கத்தில் ரயிலில் அடிபட்டு, பலத்த காயமடைந்த யானை நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது
மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் நேற்று காலை யானை ஒன்று ரயிலில் அடிபட்டது. பனார்ஹட் - நக்ராகடா வழித்தடத்தில் நேற்று காலை 8 மணி அளவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியது. ரயிலின் வேகத்தால் தண்டவாள கற்களின் மீது இழுத்துச்செல்லப்பட்டதால் யானை படுகாயமடைந்தது. ரத்தம் சொட்ட சொட்ட மரங்களுக்கு நடுவே நின்றுகொண்டிருந்த யானையை ரயில் பயணிகளும், அப்பகுதிவாசிகளும் செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இது வைரலாகி பரவியது.
தண்டவாளத்தில் இருந்து எழுந்து செல்ல முடியாமல் போராடி தடுமாறிய யானையின் வீடியோ பார்ப்போரை கண் கலங்கச் செய்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அடிபட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் பலத்த காயமடைந்த யானை நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ரயில் மோதிய வேகத்தில் உள்காயம் அதிகம் ஏற்பட்டதால் யானை உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது
ரயிலில் அடிபட்டு பெண் யானை உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது வாடிக்கையாகி வரும் நிலையில் வன உயிரினங்களை பாதுகாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பனார்ஹட் - நக்ராகடா வழித்தடத்தில் தற்போது ரயில் 50 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. அங்கு அடிக்கடி விபத்து ஏற்படும் என்பதால் 25கிமீ வேகத்தில் ரயிலை இயக்க ஏற்கெனவே உத்தரவிட்டப்பட்டிருந்த நிலையில் விபத்துகள் குறைந்ததால் ரயிலின் வேகம் 50கிமீட்டராக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.