"மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள்” - ராஜ் தாக்கரே!
மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள் என்று மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
மகாராஷ்டிரா, மும்பை, புனே போன்ற பகுதிகளில் மராத்தி பேசும் மக்களின் எண்ணிக்கை என்பது குறைந்து கொண்டே வருகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்து பலதரப்பு மக்கள் வாழும் பகுதியாக இது இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்ற கட்சியின் வருடாந்திர குடி பத்வா பேரணியில் உரையாற்றிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே ,
“ மும்பையில், இருந்துகொண்டே, மராத்தி பேசத் தெரியாது என்று சொல்கிறார்கள். அப்படி கூறினார், இனி கன்னத்தில் அறையுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து தெரிவித்துள்ள அவர், ” நாட்டைப் பற்றியும் மற்ற அனைத்தையும் பற்றியும் என்னிடம் சொல்லாதீர்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி உண்டு. அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில், மராத்தி மதிக்கப்பட வேண்டும்.
நாளை முதல், ஒவ்வொரு வங்கியையும், ஒவ்வொரு நிறுவனத்தையும் சரிபார்க்கவும். மராத்தி பயன்படுத்தப்படுகிறதா என்று சரிபார்க்கவும். நீங்கள் அனைவரும் மராத்திக்காக உறுதியாக துணை நிற்க வேண்டும். மொழி பிரச்னையில் இந்தி வேண்டாம் என்று தமிழ்நாட்டு மக்கள் தைரியமாக சொல்கிறார்கள். கேரளாவும் கூட...
முதலில் வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதையும், சாதிக் கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் நிறுத்துமாறு மகாராஷ்டிர இளைஞர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியல் ரீதியாக உங்களைப் பிரிக்கவும், மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்கவும் இங்கு சூழ்ச்சி நடக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.