Bihar Election | அதிகப்படியான வாக்குப்பதிவு சொல்லும் சேதி என்ன? தேஜஸ்விக்கு சாதகமாக மாறுகிறதா களம்?
பிஹாரில் நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தலில் 64.66% வாக்குப்பதிவு, 2020 தேர்தலை விட 8.5% அதிகம். இது தேஜஸ்வி யாதவுக்கு சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரலாற்று அடிப்படையில், வாக்குப்பதிவு அதிகரிப்பு ஆட்சி மாற்றத்தைக் குறிக்கிறது. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக கருதப்படுகிறது.
74 வயதான நிதிஷ் குமார் ஒருபுறம்... அவரை விட ஏறக்குறைய 40 வயது இளையவரான தேஜஸ்வி யாதவ் மறுபுறம் என பரபரக்கும் பிஹார் தேர்தல் களத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது. வரலாறு காணாத எண்ணிக்கையாக முதற்கட்டத்தில் 64.66 சதவீதம் பேர் வாக்களித்திருக்கின்றனர்.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 56.1 சதவீதம் பேர் வாக்களித்தளித்திருந்த நிலையில், இந்த முறை வாக்குப்பதிவு 8.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்த இடத்தில்தான் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது யாருக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 11ஆம் தேதி நடக்கவிருக்கிறது. 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 121 தொகுதிகளில் உள்ள 3.75 கோடி வாக்காளர்களில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கினர் வாக்களித்துள்ளனர். கடந்த கால தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் வாக்குப்பதிவு அதிகரிப்பது ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
பெண்கள் மத்தியில் நிதிஷ்குமாருக்கு பெரும் ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதுவே வாக்குப்பதிவு எண்ணிக்கை கூடியிருப்பதற்கு காரணம் என்றும் சுட்டுகின்றனர்.
இந்த இடத்தில்தான் பிஹார் அரசியல் வரலாற்றை லென்ஸ் வைத்து பார்க்க வேண்டியுள்ளது. 5 சதவீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு அதிகரிக்கும் போதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடிகோடிட்டு காட்டலாம். குறிப்பாக, 1980 மற்றும் 1990 தேர்தல்களை நினைகூரலாம். 1980இல் ஏறக்குறைய 7 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரிக்க, 169 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கர்பூரி தாகூரின் ஜனதா தள ஆட்சியை மாற்றச் செய்தது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஜெகந்நாத் மிஷ்ரா முதல் அமைச்சரானார்.
1990இல் 5.8 சதவீதம் அதிகப்படியான வாக்குப்பதவு ஜெகநாத் மிஷ்ரா ஆட்சிக்கு முடிவரை எழுதி, 122 இடங்களில் வெற்றி பெற்ற ஜனதளத்தை ஆட்சியில் அமர்த்தியது. லாலு முதல்வரானார். இந்த கணக்குகளில் இருந்து 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மாறுபட்டு இருக்கிறது. வாக்கு சதவீதம் 16 சதவீதம் குறைந்தது. ஆனால் லாலு வசம் இருந்த ஆட்சி ஐக்கிய ஜனதா தளத்தில் நிதிஷ் குமார்வசம் முதன்முறையாக மாறியது.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ள 121 தொகுதிகளில், 2020ஆம் ஆண்டு இரு கூட்டணிக்கும் இறுக்கி நெருக்கிய வெற்றிகளாகவே அமைந்தன. 121 தொகுதிகளில் 61 இடங்களை மகாகட்பந்தன் கூட்டணியும், 59 தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணியும் வென்றிருந்தன. இரு கூட்டணிகளும் சமபலத்துடன் உள்ள தொகுதிகளில் கூடுதலாக பதிவாகியுள்ள 8.5 சதவீத வாக்குகள் பிஹார் தேர்தல் வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் தேஜஸ்விக்கு சாதகமான தோற்றத்தை காட்டுகிறது. இந்த முறை சிராக் பஸ்வான், உபேந்திர குஷ்வாஹா ஆகியோரின் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியின் பக்கம் உள்ளன. முகேஷ் சஹானியின் வி.ஐபி கட்சி மகா கூட்டணிக்கு திரும்பியிருக்கிறது. இதில் கணிப்புகளின் திசை மாறலாம், காத்திருப்போம் நவம்பர் 14 வரை.
பிஹார் தேர்தல் தொடர்பான விரிவான செய்திகள், கட்டுரைகள், நேர்காணல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

