மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வர்.. பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, உதயநிதி; யார் இந்த ஹேமந்த் சோரன்?
மாபெறும் வெற்றி!
ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், அதன்படி, தற்போது வரை ஆளும் ஜேஎம்எம் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணி 56 இடங்களைக் கைப்பற்றியது. 41 இடங்களில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் தலைமையிலான கட்சி 34 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களில் 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. RJD மற்றும் CPIML முறையே ஆறு மற்றும் நான்கு இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து, மீண்டும் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வாரிடம் உரிமை கோரியிருந்தார்.
பதவியேற்பு விழா - i-n-d-i-a கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு
இன்று மாலை அவர் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இதன்மூலம் அவர் ஜார்க்கண்டின் 14வது முதலமைச்சரானார். ராஞ்சியின் மொராதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்தகொள்வதற்காக i-n-d-i-a கூட்டணிக் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் வந்திருந்தனர்.
அந்த வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, முதல்வர் ஹேமந்த் சோரனை தனியாக சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
யார் இந்த ஹேமந்த் சோரன்? பின்னணி என்ன?
2009ஆம் ஆண்டு முதல் கட்சியின் முகமாக வலம் வரும் ஹேமந்த் சோரன், குறுகிய காலம் மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர், 2010ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் துணை முதலமைச்சரானார். பின்னர் 2013இல் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியுடன், ஜேஎம்எம் கூட்டணி வைத்து முதலமைச்சரானார். 2014 மாநிலத் தேர்தலில், பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது, சோரன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். 2019 சட்டமன்றத் தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, சோரன் மீண்டும் இரண்டாவதாக முதல்வரானார்.
இந்த நிலையில், பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் ஜே.எம்.எம். கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வரானார். பின்னர், அவருக்கு ஜாமீன் கிடைக்கப் பெற்றவுடன் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். இதனால் அதிருப்தியடைந்த சம்பாய் சோரன், பாஜகவுக்குத் தாவினார். அதேநேரத்தில், ஹேமந்த் சோரன் சிறையில் இருந்த காலகட்டத்தில் அவரது மனைவியான கல்பனா சோரன் மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்து, ஜே.எம்.எம். கட்சியின் முகமாக மாறினார். இதன்காரணமாக அவரது கட்சி மீண்டும் வெற்றிபெற்று, முதல்வராகி உள்ளார் ஹேமந்த் சோரன்.